அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


செந்தில் பாலாஜி வழக்கு:


அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. அவரது கைது சட்டப்படி சரியானது என உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை தொடா்ந்து, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தது.


விசாரணை முடிந்த நிலையில், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் அவர் ஆஜா்படுத்தப்பட்டார். செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகையும் 3,000 பக்கங்களுக்கு ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, அவரது காவலை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா். இவரது நீதிமன்றக் காவல் கடந்த ஆகஸட் மாதம் 25ஆம் தேதி முடிவடைந்தது.


இதையும் படிக்க: Asia Cup 2023, IND Vs BAN Live: 4வது விக்கெட்டும் போச்சு.. தடுமாறும் வங்கதேசம்.. அசத்தும் இந்தியா..!


6ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு:


பின்னர், சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டாா். அவரது நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீட்டித்தும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்படுத்தவும் சிறைத் துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆகஸ்ட் 29 ஆம் தேதி நேரில் ஆஜா்படுத்தப்பட்டாா்.


வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 15ஆம்  தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா். செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே பிணை கோரியிருந்த நிலையில், இதை விசாரித்த நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாது எனவும், சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தை நாடவும் உத்தரவிட்டாா்.


அடுத்த விசாரணைக்கு காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜராகலாம் என நீதிபதி கூறினாா். அதன்படி, இன்று புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நீதிபதி முன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.


இந்த சூழலில், அவரின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6ஆவது முறையாக அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிக்க: Mark Antony Review: விஷாலை ஓரம் கட்டிய எஸ்.ஜே.சூர்யா.. கொண்டாட வைத்ததா “மார்க் ஆண்டனி” படம்?.. முழு விமர்சனம் இதோ..!