Mark Antony Movie Review in Tamil: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - விஷால் நடிப்பில் இன்று வெளியான சயின்டிஃபிக் கேங்க்ஸ்டர் ஆக்‌ஷன் படமான ”மார்க் ஆண்டனி”யின் முழு விமர்சனத்தை(Mark Antony Review) இங்கு காணலாம்.


கதைக்கரு :


விஞ்ஞானியான சிரஞ்சீவி,(செல்வராகவன்) தொலைபேசி டைம் ட்ராவல் கருவியை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு போன் பேசி எதிர்காலத்தை மாற்ற முடியும். இந்த கருவி, 1975களில் கேங்ஸ்டர்களாக வலம் வரும் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) மற்றும் ஆண்டனி (விஷால்) ஆகிய இருவரையும், ஜாக்கியின் மகனான மதன் பாண்டியனையும், ஆண்டனியின் மகனான மார்க் ஆண்டனியின் வாழ்க்கையையும் எப்படி பல்வேறு ட்விஸ்ட்களுக்கு உள்ளாக்குகிறது என்பதே படத்தின் கதை.


படத்தை பொறுத்தவரை முதல் பாதியில், கதை கொஞ்சம் கூட ஒன்றாமல் எங்கேயோ போவது போன்ற எண்ணத்தை தோன்ற வைக்கிறது. அதில் வரும் டைம் ட்ராவல் காட்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கங்கே வரும் சில காட்சிகள் இரண்டாம் பாதியில், ‘ரசிகர்களுக்கு சம்பவம் காத்துக் கொண்டு இருக்குது’ என்ற நம்பிக்கையை கொடுக்கிறது. அதற்கு ஏற்றவாறு, இண்டர்வெல் காட்சியில்தான் படக்கதை தீயாய் பற்ற ஆரம்பிக்கிறது.


அதன் பின் வரும் இரண்டாம் பாதி, மார்க் ஆண்டனியின் ரெட்ரோ வைப்பிற்குள் ரசிகர்களை கொண்டு சென்று கொண்டாட வைக்கிறது.


தி ஓவரால் கேங்க்ஸ்டர் எஸ்.ஜே சூர்யா 


எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார் என்பதற்காகவே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியது. வழக்கம் போல் இவர் அரக்கத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உடல் மொழி, வசன உச்சரிப்பு, டைமிங் காமெடி, கதாபாத்திரங்களுக்கு இடையே காட்டும் வித்தியாசம் என அனைத்து வகையிலும் ஸ்கோர் செய்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாதான் இப்படத்தை நிலைநிறுத்தும் மாபெரும் தூண் என்று சொல்லலாம். அவரின் ஸ்கீரின் பிரசன்ஸிற்காகவே இப்படத்தை காணலாம்.


அதேசமயம் ஹீரோவான விஷால் தனக்கு கொடுக்கப்பட்ட இரு கதாபாத்திரங்களுக்கு இன்னும் சற்று வித்தியாசத்தை காட்டி இருக்கலாம். இதில் நடித்த செல்வராகவன், அபிநயா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி, சுனில், நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன் உள்ளிட்டோர் நன்றாகவே நடித்துள்ளனர். சில்க் ஸ்மித்தாவாக நடித்த விஷ்ணு காந்தி பிரியா கொஞ்சம் நேரம் மட்டும் வந்தாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இனி நிறைய படங்களில் இவரை பார்க்கலாம். 



படத்தில் பாடல்கள் இருக்கா?


படத்தில் வெறும் மூன்றே மூன்று பாடல்கள்தான் ஆனால் அதைப்பற்றி பேச எதுவும் பெரிதாக இல்லை. “வருது வருது விலகு விலகு”, “அடியே மனம் நில்லுனா நிக்காதடி”, “கண்னை நம்பாதே”, “பஞ்சு மிட்டாய் சேலைக்கட்டி” ஆகிய பழைய பாடல்கள் இடம்பெற்றுள்ளது. பழைய பாடல்களை சூப்பராக ரீமேக் செய்து, படத்திற்கு தனி வைப்பை கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால் பின்னணி இசையில் ஏமாற்றியுள்ளார். 


சிறப்பாக  பணியாற்றிய டெக்னிக்கல் குழு 


டைம் டிராவல் சம்பந்தப்பட்ட கதை என்பதால் ஒளிப்பதிவு தொடங்கி படத்தொகுப்பு, ஆடை வடிவமைப்பு, கலை வடிவமைப்பு என அனைத்தும் சிறப்பாக உள்ளது. இதற்கு முன்பு மூன்று படங்களை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரனின் கேரியரில் இப்படம் மைல் கல்லாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.  இவர் எழுதிய வசனங்களும் காமெடி காட்சிகளும் விசில் சத்தத்தை குவித்தது.



படத்தை தியேட்டரில் பார்க்கலாமா?


முதல் பாதியை பொறுமையுடன் பார்த்துவிட்டோம் என்றால் இரண்டாம் பாதியில் வரும் ஒவ்வொரு நிமிடத்தையும் என்ஜாய்
செய்து ரசிக்கலாம். டைம் மிஷின் தொடர்பான காட்சிகளை இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக காண்பித்து இருக்கலாம். ஆகமொத்தம், படம் பெயர்தான் மார்க் ஆண்டனி. ஆனால் ஸ்கோர் செய்தது அப்பனும் மகனுமான ஜாக்கியும் மதனும்தான். 


இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படங்களின் கதைகள் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததோடு,  குடும்பத்தோடு காண முடியாத நிலையும் இருந்தது. ஆனால் இந்த முறை தன் மீதான குற்றச்சாட்டை போக்க குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று இந்த விடுமுறையை கொண்டாடும் வகையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தை வழங்கியுள்ளார் ஆதிக்.