வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது, பெரியளவு கனமழையாக பெய்யாவிட்டாலும் சென்னையில் பல பகுதிகளிலும் 10 செ.மீட்டர் முதல் 20 செ.மீட்டர் வரை பெய்தது. இதனால், சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் தேங்கியது.

களத்தில் மு.க.ஸ்டாலின்:


வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் முதலே பல இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேளச்சேரி, கிண்டி ரேஸ் கிளப்பகுதியில் நடைபெறும் குளம் வெட்டும் பணி, நாராயணபுரம் ஏரி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.  இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் மழைநீர் முழுமையாக அகற்றப்படும் வரை களப்பணி தொடரும் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

களப்பணி தொடரும்:






இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ கனமழை குறித்த அலர்ட் பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம். பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றி களப்பணியைத் தொடர்ந்திடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.


சென்னையில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். நேற்று மழையிலும் கடுமையாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை நேற்று நேரில் சந்தித்து பாராட்டினார். சென்னையில் மழைநீர் தேங்கிநின்ற புரசைவாக்கம், கிண்டி, தேனாம்பேட்டை, தி.நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் ராட்சத மோட்டார்கள் மூலம் விரைவாக அகற்றப்பட்டதால் தற்போது சாலைகளில் தண்ணீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.


சென்னையில் மழை தொடருமா?


சென்னை நகருக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் சென்னையில் காலை முதல் வெயில் அடித்து வருகிறது. தற்போது வரை பெரியளவு மழை இல்லாத சூழலில் இன்று இரவு, நாளை மழை பொழியுமா? அல்லது இயல்பான வானிலையில் நிலவுமா? என்று மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். தமிழ்நாட்டில் மழை அதிகளவு பெய்த இடங்களிலும் அதிகாரிகள், அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.