சென்னை பள்ளிக்கரணை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
‘’மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டதாலேயே நீர் தேங்காமல் வடிந்துள்ளது. பணிகள் நல்ல முறையில் கைகொடுத்துள்ளன. 3 மாதங்களுக்கு முன்பே வட கிழக்குப் பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டோம். இதற்கென ஆட்சிக்கு வந்தபோதே ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு
படிப்படியாகப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் எல்லாப் பணிகளையும் முடிக்க முடியாது. மழைநீர் வடிகால் பணிகளில் 30 சதவீதம் இன்னும் மிச்சம் இருக்கிறது. அவையும் விரைவில் நிறைவு பெறும். சென்னை மாநகர மக்களுக்கும் புறநகர்ப் பகுதி மக்களுக்கும் விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
தூய்மைப் பணியாளர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
கிண்டி ரேஸ் கிளப்பில் முதல்வர் ஆய்வு
முன்னதாக, கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 4 குளங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதனை முதலமைச்சர் பார்வையிட்டு, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.