தமிழ்நாட்டில் மழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில், இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. சென்னையில் நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிவுரைகள்:
- விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள்
தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து
கொள்ள வேண்டும். - தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
- முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
- கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம்.
- அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
- கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும்.
அரசு முன்னெச்சரிக்கை:
இந்த அறிவுரைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் வகையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
மேலும், சிறப்பு உதவி எண்கள், செயலி, வாட்ஸ் அப் எண்கள் என பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை செய்துள்ளளது. மழைநீர் அதிகளவு தேங்கம் இடங்களில் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 21 ஆயிரம் பேர் சுழற்சி முறையில் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மழை பாதிப்பு அதிகம் எதிர்பார்க்கப்படும் மற்ற மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.