வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெற்றதையடுத்து சென்னையில் விடிய விடிய கனமழை பெய்தது.

  


தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை இன்று அதிகாலை நெருங்கியது. இதன், காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் சென்னை சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையின் பல சுரங்கப்பாதைகள் மழைநீர் தேங்கி நீச்சல்குளம் போல காட்சியளிக்கின்றன. 



  • தி.நகர், ராயபுரம், ராயப்பேட்டை, திருவான்மியூர், சைதாப்பேட்டை, அரும்பாக்கம், அமைந்தகரை, வடபழனி, நந்தனம்,நுங்கம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் கடுமையாக பெய்து வருகிறது கனமழை

  • சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிப்பு 

  • சென்னை புறநகரிலும் தொடர் கனமழை – அதிகாலை 4 மணி வரை மட்டுமே எண்ணூரில் 15 செ.மீ. மழைப்பதிவு

  • காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அதிகனமழை


இந்நிலையில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று மாலை கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று காலை முதல் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


 






 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் அதி கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் பரவலாக பெய்த மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் இன்று அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை  அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீர்நிலைகளின் அருகே நின்று செல்ஃபி எடுக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.  மேலும், வீட்டில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கல்விச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தார். 



சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் 10 செ.மீக்கும் அதிகமாக மழை பொழிவு இருந்தது    


ஏற்கனவே, நகரின் பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், இன்றைய கனமழையால் சென்னையின் பல பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகளி மேலும் சிக்கலாகும் என்று அறியமுடிகிறது.