சென்னையில் நாளை காலை 8.30 மணிக்குள் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்றும் நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், இன்று இரவில் இருந்து நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கேட்டுகொண்டுள்ளார். எழிலகத்தில் இதுகுறித்து பேசிய அவர் கீழ்கண்ட சில அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளார்.




மக்கள் கீழ்க்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்ற வேண்டும் : வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் 


1.அவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை தனியாக வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.


2. நீர்நிலைகளின் அருகில் செல்வதையும், செல்ஃபி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.


3. அடையாள அட்டை, கல்வி சான்றிதழ்கள், நிலப்பட்டா, பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை நெகிழி பைகளில் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். 


4. வீடுகளின் அருகாமையில் அறுந்த மின்கம்பிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், உடைகளை உலர்த்த மின்கம்பிகளை உபயோகிக்க கூடாது. 


5. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பினைக் கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு அலுவலர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 


6. டார்ச் லைட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்தி, மருந்துகள் மற்றும் உலர்ந்த உணவு வகைகளை நெகிழி பைகளில் வைத்து எடுத்துச் செல்ல ஏதுவாக வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.


7. நீர் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டி வைக்காமல், கால்நடைகள் தாங்களாகவே எளிதில் வெளியேறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.


8 தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.


9, நீரிலோ அல்லது மின்சாரத்திலோ பொதுமக்கள் காயப்பட நேர்ந்தால் உடனே மாவட்ட கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்.1077 தொடர்பு கொள்ள வேண்டும்.


10. இடி மற்றும் மின்னல் ஏற்படும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை


கடைபிடித்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். 


11. பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848. மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம்.

முன்னதாக,


மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பெருநகரில் நாளை காலை 8.30 மணிக்குள், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்.சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரு சில இடங்களில் மிக கனமழை வரையில் பெய்யும். சென்னையில் கடந்த 9 மணி நேரத்தில் அதிகபட்சமாக 32 மி.மீ, மழையும், நுங்கம்பாக்கத்தில் 23.7 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தனது பேட்டியில், ‘மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது சென்னையில் அதிகனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக மழை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் 3 பேரிடர் மீட்புப்படை உள்ளது. மழை குறைந்த பிறகு பயிர்ச்சேதம் குறித்து முழுமையாக கணக்கெடுக்கப்படும்” என்று கூறினார்.