சென்னையில் மழை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த மோசமான நிலைமையை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.


மிக்ஜாம் புயலால் வட தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விட்டுவிட்டு கன மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆங்காங்கே கடுமையாகத் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நேரத்தில் பொது மக்கள் மழையால் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பு நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


மாங்காட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் ரப்பர் படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆந்திரா செல்லக்கூடிய புழல் சாலையில் 4 அடி தூரத்திற்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 


குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையின் உள்ளே மழைநீர் சூழ்ந்துள்ளதால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பழவேற்காட்டில் உள்ள லைட் ஹவுஸ் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து கடல் நீர் கிராமத்திற்குள் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 


இந்த நிலையில் இந்த மோசமான நிலைமையை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.






இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னை கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சென்னை கடலோரங்களில் புயல் மேகங்களின் மெதுவான நகர்தலால் இன்று மாலை அல்லது இரவு வரை சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.