மிக்ஜாம் புயலால் சென்னையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” புயலாக தீவிரமடைந்து விட்டது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்து வருகிறது. புயலானது தற்போது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 110 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.10 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயலானது வடக்கு -வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திராவில் நெல்லூருக்கும், மசூலிப்பட்டணத்துக்கும் இடையே நாளை (டிசம்பர் 5) கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் சென்னையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. மரங்களும் முறிந்து விழுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். 4 மாவட்ட நிர்வாகமும் மழை வெள்ள பாதிப்பு பணிகளை திறம்பட கையாள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
வெள்ள நீர் மற்றும் முறிந்து விழுந்த மரங்களை உடனடியாக அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் மழை பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், “மழை வெள்ள பாதிப்புகள் குறித்து வரும் புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நாளையும் பொதுவிடுமுறை இருக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் புயல் கரையை கடந்து விடும் என்பதால் விடுமுறை விட வேண்டிய தேவை இருக்காது என கூறியுள்ளார். ஆனால் மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப சில நாட்கள் ஆகும் என்பதால் நாளையும் விட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.