சென்னைக்கு 280க்கு கிமீ தூரத்தில் தாழ்வு மண்டலம் இருப்பதால் புயலாக மாற வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதோடு, மழைக்காக மட்டுமே ரெட் அலர்ட் விடுவிக்கப்படவில்லை என்றும் அதன் விளைவுகள் உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதாக பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.


காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாநிலத்தில் நான்கு வடமாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் 12 மாவட்டங்களில் கனமழை பொழியக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.


ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது ஏன்?


இதனால், ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தமிழக அரசு இயந்திரம் முழு வீச்சில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த ஆண்டை போல மீண்டும் பாதிக்கப்படுவோமோ என சென்னை வாசிகள் கலக்கத்தில் இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், சென்னைக்கான கனமழை மெல்ல நகர்ந்து, தற்போது ஆந்திர மாநிலத்தில் கொட்டி வருகிறது.


முன்னதாக தமிழ்நாட்டின் நான்கு வடக்கு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த ரெட் அலெர்ட் ஆனது ஆந்திராவின் தெற்கு மாவட்டங்களான திருப்பதி, சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.


வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?


இந்த நிலையில், புயலாக மாற வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்றைய செய்தியாளர் சந்திப்பில், இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் இதுகுறித்து பேசுகையில், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கரையை கடக்காததால் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது.


வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னைக்கு அருகே கரையை கடக்கும்; சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.


காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற பல கட்டங்கள் உள்ளன, புயலாக மாறுமா என்பதை இப்போது கணிக்க முடியாது ஏற்கெனவே பெய்த மழையின் அளவு, காற்றின் வேகத்தை பொறுத்தே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.


நேற்று நள்ளிரவு முதலே மழை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது லேசான மழை மட்டுமே ஆங்காங்கே பெய்து வருகிறது.