கன மழை, போதிய பயணிகள் வருகை இல்லாததால் சென்னையில் விமான சேவைகள் சில ரத்து செய்யப்பட்டு உள்ளன. பெங்களூரு, அந்தமான், புது டெல்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
குறைந்த பயணிகள் கூட்டம்
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. ஏராளமான பயணிகள் தங்களின் பயணத்தையும் ரத்து செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.
விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் அதற்கு ஏற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் எனவும் சில இடங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விமான சேவைகளில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்றே தெரிகிறது.
நேற்று எப்படி?
சென்னை விமான நிலையத்தில் நேற்று விமான சேவைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. எனினும் காலை 9 மணியிலிருந்து, மாலை 3 மணி வரையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 34 விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இதில் சிங்கப்பூர், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 5 சர்வதேச விமானங்கள், 29 உள்நாட்டு விமானங்கள் அடக்கம்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து வெளியிட்டு வரும், வானிலை பற்றிய அறிக்கைகளை கவனமாக ஆய்வு மேற்கொண்டு, விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
உடனுக்குடன் தகவல் தெரிவிக்க ஏற்பாடு
விமான சேவைகளில் மாற்றங்கள் ஏதாவது இருக்குமேயானால், பயணிகளுக்கு உடனுக்குடன் அந்தந்த விமான நிறுவனங்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும்போது, வந்து தரையிறங்கும்போது, ஓடு பாதைகளில், விமானங்கள் ஓடும்போது, ஓடு பாதைகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதோடு அனைத்து விமானங்களையும் குறித்த நேரத்தில் பாதுகாப்பாக இயக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.