பாலியல் குற்றப்புகார் விவகாரத்தில் சென்னையின் பிரபல தனியார் பள்ளி விரைந்து செயல்பட்டதாகவும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அந்தப் பள்ளியின் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ‘கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் மாணவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக எங்களுக்குக் கிடைத்த புகாரை அடுத்து அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களின் வழியாகவே இந்தப் புகார் பள்ளியின் பார்வைக்கு எடுத்துவரப்பட்டது.இதையடுத்து நிர்வாகம் இதில் முறையான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இந்தச் சூழலை அணுக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரும் எந்த ஒரு ஆலோசனையையும் ஏற்றுகொள்ள நிர்வாகம் தயாராக இருக்கிறது.
மேலும், இந்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான எந்தவிதப் புகாரையும் நிர்வாகம் பெறவில்லை. ஒரு ஆசிரியரின் நடத்தையைக் கொண்டு பள்ளியின் மற்ற ஆசிரியர்களின் தொழில்முறை சார்ந்த சீரிய ஈடுபாட்டை மதிப்பிடக்கூடாது. எங்களுடைய மாணவர்களின் நலன் எங்களுக்குப் புனிதமானது என பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.
பள்ளியின் தலைவர் ஷீலா ராஜேந்திரன்,’எங்கள் பள்ளியின் அறுபது வருடப் பாரம்பரியத்தில் இதுபோன்ற புகார்கள் எழுந்ததில்லை.இது மற்ற பள்ளிகளுக்கான எச்சரிக்கை. எங்கள் பள்ளியில் இனிமேலும் இதுபோன்ற புகார்கள் எழாமல் இருக்க சட்டத்துறை சார்ந்து மற்றும் சட்டத்துறை அல்லாத மூத்த நபர்கள் கொண்ட குழுவினை உருவாக்க உள்ளோம். அவர்கள் இதுபோன்ற தவறுகள் எதிர்வரும் காலத்தில் நடக்காமல் எங்களை வழிநடத்திச் செல்வார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பத்மா சேஷாத்ரி பள்ளி இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிபடிப்பை முடிக்க உறுதுணையாக இருந்திருக்கிறது. தற்போது மட்டும் 6500 மாணவர்கள் பள்ளியில் படிக்கிறார்கள் அவர்களை 450 ஆசிரியர்கள் வழிநடத்துகிறார்கள். இவர்களில் 96 சதவிகிதம் பேர் பெண்கள். எங்களது நிறுவனர் ஒய்.ஜி.பார்த்தசாரதி உருவாக்கிய குறிக்கோளில் இருந்து நிறுவனம் என்றுமே தவறியதில்லை.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read:ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 30 மாணவிகள் பாலியல் தொல்லை புகார்