சென்னையில் 40 கி.மீ., மேல் வாகனத்தை இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தற்போதுள்ள வளங்களில் முன்னேற்றத்தை நோக்கி நடவடிக்கை எடுப்பதிலும், போக்குவரத்தை சீர்செய்வதிலும் அதை அமல்படுத்துவதிலும் மற்றும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் திறமையான செயல்பாட்டிற்கான நவீன தொழில்நுட்ப முன் முயற்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. 


அந்த வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை Mandark Technologies PvtLtd மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ரூ. 1,00,01,000/-. செலவில் "நேரடி போக்குவரத்து என்ற செயல்பாட்டினை உருவாக்கியுள்ளது. இந்த செயல்பாடானது நகரத்தில் 300 சந்திப்புகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று தொடங்கி வைத்தார். 


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 10 இடங்களில் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாகவும், வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 50 கி.மீ. வேகத்திலும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 40 கி.மீ. வேகத்தில் வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் போக்குவரத்து துறை உத்தரவு உள்ளது. 


அரசிடம் அனுமதிப் பெற்று குறிப்பிட்ட நாட்களுக்கு அபராதம் இல்லாமல் இந்த விதிமுறை விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.