சென்னை பூந்தமல்லியில் இருந்து திருவெற்றியூர் செல்லும் மாநகரப் பேருந்தினை இயக்கிய ஓட்டுநர் தீடீரென சுயநினைவை இழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


சென்னை பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் நோக்கிச் செல்லும் மாநகரப் பேருந்தை (தடம் எண் -101), ஏழுமலை என்ற ஓட்டுநர், ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்தில் சுமார் 40க்கும் அதிகமான பயணிகள் இருந்துள்ளனர். 


பேருந்து, நியூ ஆவடி சாலை சந்திப்பை எட்டியதும், எதிர்பாராத விதமாக, பேருந்தின் ஓட்டுநர் ஏழுமலை  திடீரென மயக்க நிலைக்குப் போனார். அந்த நிலையிலும் விபத்து நிகழ்ந்து விடாமல் இருக்க பேருந்தை  பாதுகாப்பாக ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார் ஓட்டுநர் ஏழுமலை. 


பேருந்து நிறுத்தப்பட்டதும் நடத்துநர் ஓட்டுநரிடம் விசாரிக்கச் சென்றபோது, ஓட்டுநர் ஏழுமலை தனது இருக்கையில், சரிந்தவாறு காணப்பட்டுள்ளார். இதனால் பதட்டமடைந்த நடத்துநர் ஓட்டுநர் ஏழுமலையை எழுப்ப முயற்சித்துள்ளார். ஆனால்  ஓட்டுநர் ஏழுமலை பதில் ஏதும் அளிக்காமல் இருந்ததால், அதிர்ச்சி அடைந்த நடத்துநர் பேருந்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். 


இந்த நேரத்தில் அந்தப் பகுதி ரோந்துக் காவலில் இருந்த போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் யாஹியா, போலீஸ்  பேட்ரோல் ஜீப்பில் அதாவது ரோந்து ஜீப்பில், மாநகர பேருந்து ஓட்டுநர் ஏழுமலையை  ஏற்றிக் கொண்டு சைரனை ஒலிக்க விட்டு, அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு விரைவாக விரைந்துள்ளார். 


உடனே அங்கிருந்த மருத்துவர்கள் மயக்கநிலையில் இருந்த ஓட்டுநர் ஏழுமலைக்கு முதலுதவி அளித்தனர். இதனால், மயக்க நிலையில் இருந்த ஏழுமலை சுயநினைவுக்கு திரும்பினார். அதன் பின்னர் காவலர் யாஹியாவை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர். மருத்துவர்கள், ”இனி ஆபத்து ஏதும் இல்லை,  குறித்த நேரத்தில் கொண்டுவந்து சேர்த்து விட்டீர்கள், என்று தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் கோல்டன் ஹவர்ஸ் என்கிற உயிர்காக்கும் நேரத்தை, எஸ்.ஐ- யாஹியா சரியாய்ப் பயன்படுத்தியதால்  அரசு பேருந்து ஓட்டுனர் ஏழுமலை, மறுவாழ்வு பெற்றிருக்கிறார் எனக் கூறியுள்ளனர். இதனால் ஒரு உயிரைக் காப்பாற்றிய நிம்மதியில் பெருமூச்சு விட்டிருக்கிறார் காவலர் யாஹியா.


தகவல் அறிந்த காவல் துறையினரும், போக்குவரத்து துறையினரும் சப் - இன்ஸ்பெக்டர் யாஜியாவை பாராட்டி வருகின்றனர்.