தென்மேற்கு பருவமழை கடந்த 3-ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது. அது முதல் தமிழ்நாட்டில் பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய ( திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை மறுநாள் மற்றும் 18 ஆகிய தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரியாகவும் பதிவாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 11 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக தேனி மாவட்டம் தேக்கடியில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்று முதல் வரும் 18-ஆம் தேதி வரை கேரளம், கர்நாடகம் ஆகிய கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Electricity bill Payment: மின் கட்டணம்: இன்றே கடைசி... அவகாசம் தர வாய்ப்பில்லை; அமைச்சர் செந்தில் பாலாஜி!