சென்னை பிரசிடென்சி காலேஜ் மாணவர்கள் கையில் பட்டாகத்தியுடன் சென்னை லோக்கல் ரயில்வே நடைமேடையில் உரசியபடி சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இவர்கள் மூன்று பேரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தநிலையில், இதுபோன்று ஓடும் ரயிலில் யாராவது சேட்டை செய்தால் மக்கள் புகார் அளிக்க வேண்டும் என ரயில்வே காவல்துரையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு பின் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளிலும், லோக்கல் ரயில்களிலும் பொதுமக்களுக்கு இடையூறாக பல்வேறு சேட்டைகள் செய்து வருவதாக பல வீடியோக்கள் வெளிவந்து அதிர்ச்சியளித்தது.
இதையடுத்து ஆங்காங்கே இதுபோன்று செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டித்தும், கைது செய்தும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரலிருந்து கும்மிடிப்பூண்டு சென்ற லோக்கல் மின்சார ரயிலில் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் நண்பர்களுடன் சென்று ஒன்றாக ஏறியுள்ளனர். அப்போது ரயில் கிளம்பி சிறிது நேரம் அமைதியாக இருந்த மாணவர்கள் கதவின் ஓரத்தில் நின்றபடியும், படியில் தொங்கியபடியும் வந்துள்ளனர். தொடர்ந்து ரயில் பெட்டிகளில் நடனமாடி, பாட்டுபாடியும் ரயில் பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் செயல்பட்டு வந்தனர். திடீரென மூன்று மாணவர்கள் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து கைகளில் சுழற்றியும், நடைமேடைகளில் உரசியும் பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலும் நடந்து கொண்டனர். இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் பயந்து ஒதுங்கியும் சென்றுள்ளனர். தொடர்ந்து அருகிலிருந்த ரயில்வே காவல்துறையினர் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் வீடியோவை பகிர்ந்த சென்னை கோட்ட ரயில்வே மேலாளர், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டிருந்தார். 45 வினாடிகள் நீளமான காட்சிகளில் மாணவர்கள் ரயில்வேயில் பயணம் செய்யும் போது ஆபத்தான ஸ்டண்டில் ஈடுபடுவதைப் படம்பிடித்துள்ளனர். இதற்கிடையில், ஃபுட்போர்டின் விளிம்பில் பயணம் செய்வது ஆபத்தானது மட்டுமல்ல, ரயில்வே சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றமாகும்.
இந்த வழக்கு தொடர்பான விவரங்களை அதிகாரிகள் வெளியிட்டு, முறைகேட்டில் ஈடுபட்ட மூன்று மாணவர்களான கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த அன்பரசு, ரவிச்சந்திரன் மற்றும் பொன்னேரியைச் சேர்ந்த அருள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். இந்த சம்பவம் அக்டோபர் 9 ஆம் தேதி நடந்ததாகவும், ரயிலின் கோச்சில் கத்தியால் இடித்ததாகக் கூறப்படும் மூவரும் சலசலப்பை உருவாக்கிய பின்னர் சக பயணிகளை கவலையடையச் செய்ததாகவும் கூறப்படுகிறது.