சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஜனவரி 6 முதல் 8ஆம் தேதி வரை சென்னை இலக்கியத்‌ திருவிழா நடைபெற உள்ளது. 


சட்டப்பேரவையில்‌ 2022 - 2023-ஆம்‌ ஆண்டிற்கான பொது வரவு செலவு திட்டத்தில்‌ இலக்கியச்‌ செழுமை மிக்க தமிழ்மொழியின்‌ இலக்கிய மரபுகளைக்‌ கொண்டாடும்‌ வகையில்‌ ஆண்டுக்கு நான்கு இலக்கியத்‌ திருவிழாக்கள்‌ நடத்தப்படும்‌ என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொது நூலக இயக்ககம்‌ வாயிலாக தமிழகத்தில்‌ வைகை, காவேரி, பொருநை மற்றும்‌ சிறுவாணி என நதி நாகரிக மரபு அடிப்படையில்‌ நான்கு இலக்கியத் திருவிழாக்களும்‌, சென்னையில்‌ ஒரு இலக்கியத்‌ திருவிழாவும்‌ நடத்தப்பட்டு வருகின்றது.


இதன்‌ முதல்‌ நிகழ்வாக பொருநை இலக்கிய திருவிழாவானது பல இலக்கிய ஆளுமைகளை தன்னகத்தே கொண்ட, பல சாகித்திய விருதுகளைப்‌ பெற்ற, திருநெல்வேலியில்‌ 26.11.2022 மற்றும்‌ 27.11.2022 ஆகிய இரு நாட்கள்‌ சிறப்பாக நடைபெற்றது.


தனித்தனி அரங்குகள்


இதன்‌ தொடர்ச்சியாக தமிழகத்தின்‌ தலைநகரத்தில்‌, தமிழகத்தின்‌ அனைத்து பகுதிகளின்‌ பண்பாட்டின்‌ கூடாரமாக திகழும்‌ சென்னையில்‌ இலக்கியத்‌ திருவிழா 06.01.2023 முதல்‌ 08.01.2023 வரை மூன்று நாட்கள்‌ அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில்‌ நடைபெறவுள்ளது. இவ்விழாவானது இலக்கிய படைப்புகள்‌, பண்பாட்டின்‌ உச்சங்கள்‌ என இலக்கிய வாசகர்களுக்கான அரங்கும்‌, கல்லூரி மாணவர்களை இலக்கியம்‌ நோக்கி வழிநடத்தும் வகையில்‌ சிறந்த ஆளுமைகளின்‌ உரையாடலுடன்‌ கூடிய மாணவர்களுக்கென தனித்த அரங்கும்‌, சிறுவர்களுக்கு நமது இலக்கிய உலகை திறந்துகாட்டும்‌ கதை, பாடல்‌, நாடகம்‌ வழியாக கடத்தும்‌ வகையில்‌ சிறுவர்‌ இலக்கிய அரங்கும்‌, திரை மொழியாக உலக, இந்திய சினிமாக்களை அதில்‌ தேர்ந்த ஆளுமைகளைக்‌ கொண்டு காட்சி அரங்கும்‌ அமையும்‌.


மேலும்‌ சிறுவர்களுக்கு அரசு பள்ளி மாணவர்களின்‌ நிகழ்த்துகலைகளும்‌, பொம்மலாட்டம்‌, நாடகம்‌ மற்றும்‌ மரபு சார்‌ விளையாட்டுகள்‌ இடம்பெறும்‌. மூன்று நாட்களும்‌ மக்கள்‌ அனைவரும்‌ கண்டுகளிக்கும்‌ வகையில்‌ நமது கலாச்சாரம்‌ சார்ந்து நாடகம்‌ மற்றும்‌ நிகழ்த்து கலைகளும்‌ நடைபெறும்‌.




சென்னை இலக்கியத்‌ திருவிழாவினை கொண்டாடும்‌ வகையில்‌ அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம்‌ முழுவதும்‌ வண்ண விளக்குகளாலும்‌, கலை வேலைப்பாடுகளாலும்‌, ஓவியங்களாலும்‌ நிறைந்து அமையும்‌. நூலக வளாகத்தில்‌ அரிய பருவ இதழ்கள்‌, நூல்கள்‌, ஆவணங்களும்‌, தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள்‌ காலம்‌ முதல்‌ வெளிவந்த அரிய நாணயங்களும்‌, சென்னையின்‌ வரலாறு சார்ந்த ஒளிப்படங்களும்‌ தனித்தனியாக காட்சிப்படுத்தப்படும்‌.
இந்நிகழ்வுகள்‌ முழுமையும்‌ காணொளியாக பதிவு செய்யப்பட்டு அனைவரும்‌ காணும்‌ வகையில்‌ இணையத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படும்‌.


சிறப்புப் போட்டிகள்


பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்கள்‌ பங்குபெறும்‌ வகையில்‌ அவர்களுக்கு படைப்பாற்றலுடன்‌ எழுதுதல்‌, பேச்சுப் போட்டி,‌ கவிதைக்கு மெட்டமைத்தல்‌, இலக்கிய மீம்ஸ்‌, இலக்கிய சுவரொட்டிகள்‌ உருவாக்குதல்‌, நூல்‌ திறனாய்வு, கதை எழுதுதல்‌ என பல போட்டிகள்‌ நடத்தப்பட்டு பரிசுகள்‌ வழங்கப்படும்‌.


சென்னை இலக்கிய திருவிழாவிற்கு மக்கள்‌ அனைவரும்‌ பங்கேற்கும்‌ வகையில்‌ வானொலி, பண்பலை, செய்தி ஊடகங்கள்‌, சமூக ஊடகங்களில்‌ தொடர்‌ நிகழ்வுகள்‌ இடம்பெறும்‌. சென்னை இலக்கியத்‌ திருவிழா தமிழகத்தின்‌ கலை, பண்பாட்டு மற்றும்‌ மரபினை பிரதிபலிக்கும்‌ விழாவாக அமையும்‌.