பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு தமிழ்நாடு பாஜக தலைவர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை என்றும் சில நேரங்களில் தரக்குறைவாக பேசுகின்றனர் என்றும் பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, திமுகவின் அடிமைகள் என அண்ணாமலை செய்தியாளர் ஒருவரை பேசியது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், கடலூரில் செய்தியாளர்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக விமர்சித்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் விடுத்துள்ளது.


இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தீபாவளி மதுவிற்பனை எண்ணிக்கை குறித்து பேசி விட்டு, இது தொடர்பாக என் மீது வேண்டுமானால் வழக்கு போடுங்கள், பத்திரிகையாளர்களை மிரட்டாதீர்கள் என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறிவுரை  கூறியிருந்தார்.






ஆனால், இரண்டு நாட்களுக்குள் இன்று (27-10-2022) கடலூரில் செய்தியாளர்கள் கேள்விகேட்க முயன்றபோது ஆத்திரமடைந்து மரத்து மேல குரங்கு போல தாவித்தாவி சுற்றி சுற்றி வருகிறீர்கள்  என பாஜக தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய கருத்துக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு, நாய், பேய் சாராய வியாபாரிக்கு எல்லாம் பதில் கூறமுடியாது எனவும் ஆவேசப்பட்டிருக்கிறார். 


அவரது அரசியல் எதிர்வினைகள் குறித்து நாம் விமர்சிக்க வேண்டியதில்லை. ஆனால், அண்ணாமலை செய்தியாளர்கள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தி குரங்குகள் என்று தரக்குறைவான விமர்சனம் செய்திருப்பதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


உண்மையான பத்திரிகையாளர்கள் அறிவாலயத்திற்கும் அடிமைகளும் இல்லை அவர்கள் கமலாலய கூலிகளும் இல்லை. கட்சி, ஆட்சி என பத்திரிகையாளர்களை அடையாளப்படுத்தி இழிவுப்படுத்தும் போக்கை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். 


தமிழ்நாட்டில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளால் அவமதிக்கப்படும் மிரட்டப்படும் போக்கு அதிகரித்துவருவது வேதனைக்கும் கண்டனங்களுக்கும் உரியது.


பொது வெளியில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியதை மீண்டும் வலியுறுத்துவதோடு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமது வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். அதுவே ஆரோக்கிய அரசியலாக அமையும் என்று நம்புகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.