அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இவரும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கினார்.
இதனையடுத்து ஓபிஎஸ் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாடிய போதும் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே வந்தது. தேர்தல் ஆணையமும் அவரை அதிமுக பொதுச்செயலாளராக அங்கரீத்து விட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவை வழிநடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேசமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்கக்கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்தாண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தன்னை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தப் பிறகும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய 3 முறை ஓபிஎஸ் தரப்பு கால அவகாசம் கேட்டதால் அதிமுக கொடி,சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு சென்றது.
இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் வந்தது. அப்போது தகுதி நீக்கம் அடிப்படையில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் ஓபிஎஸ் தரப்பை குற்றம் சாட்டி வாதம் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட ஓபிஎஸ் தரப்பினருக்கு பல கேள்விகளை முன்வைத்தனர். தொடர்ந்து இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்தமாட்டோம் என ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதன் பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.