சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறுவது தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணீந்தர் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மாநாடு, கருத்தரங்குகள் நடைபெறும் இடங்களில் மாவட்ட ஆட்சியர், துணை ஆணையர்களின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இதுதொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து எதிர்ப்புகள் காரணமாக மதுபானம் பரிமாற்றத்திற்கான சிறப்பு உரிமம் தொடர்பான அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதில், ”முன்னதாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இதர இடங்கள் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, வணிகப்பகுதிகள் இல்லாத இடங்கள், விழாக்கள்,விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் நீக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருமண மண்பங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதி அளிக்க வழிவகை செய்யும் சட்ட திருத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் மனு:
தமிழ்நாடு அரசின் அறிவிப்பை எதிர்த்து வழக்கறிஞரும், சமூக நீதி பேரவை தலைவருமான பாலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் ஆர். கலைமதி அமர்வு இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் மே மாதத்தில் நீதிமன்றத்திற்கு ஒரு மாத கோடை விடுமுறை விடப்படுவதால், இந்த வழக்கு விசாரணை ஜூன்14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
ஷாருக்கானை இயக்கிய மகன்.. வோட்கா பிராண்ட், ஆடை நிறுவனம், இயக்கம்... பிஸினஸில் கலக்கும் ஆர்யன் கான்!