தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்  மற்றும் சிஎஸ்கே அணிகளில் தோனியின் சக வீரருமான இம்ரான் தாஹிர், தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் அவரது தலைமைத்துவம் குறித்து கருத்து தெரிவித்தார்.


2017 போட்டி


பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் (ஆர்பிஎஸ்) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2017 ஆட்டத்தில், ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்க, அப்போது புனே அணியின் விக்கெட் கீப்பர் எம்எஸ் தோனி தனது மாஸ்டர் கிளாஸைக் காட்டி அவரது விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கினார்.


லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் வீசிய பந்தில் ஏபிடி வீழ்த்தப்பட்டார். அந்த விக்கெட்தான் அந்த போட்டியில் ஆர்சிபி அணியை வெல்ல காரணமாக அமைந்தது. ஐபிஎல் 2021க்கு பின், சிஎஸ்கே அவரை விடுவித்த பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த மெகா ஏலத்தின் போது தாஹிர் விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2019 பதிப்பின் பர்பிள் கேப் வெற்றியாளரான தாஹிர் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வர்ணனைக் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார், லீக் போட்டிகளின்போது, ஸ்பின்-பவுலிங் குறித்த தனது கருத்துக்களை பார்வையாளர்களுக்கு வழங்குகிறார்.



ஏபிடி ஸ்டம்பிங்


லாலன்டோப் உடனான சமீபத்திய பேட்டியில், ஐபிஎல் நடக்கும் இவ்வேளையில் அவர் ஆடிய ஐபிஎல் ஆட்டங்கள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, கேப்டன் தோனி வீரர்களுக்கு தரும் நம்பிக்கையை குறித்து தாஹிர் பேசினார். மேலும் அவரது கேப்டன்சி குறித்தும், விக்கெட் கீப்பிங் குறித்தும் பேசினார். ஆர்சிபியின் ஏபி டி வில்லியர்ஸ்-ஐ தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்ததை நினைவுகூர்ந்த தாஹிர், "மூன்று ஸ்டம்புகளும் சில நொடிகளில் பிடுங்கப்பட்ட அந்த ஸ்டம்பிங்கை நான் இன்னும் வியந்து பார்க்கிறேன், எப்போதும் அதன் ஹைலைட்ஸ் வீடியோவை பார்த்துக் கொண்டே இருப்பேன்," என்றார்.


தொடர்புடைய செய்திகள்: GT vs MI, Match Highlights: பாவமாய் பறிபோன விக்கெட்கள்.. ஆரம்பம் முதலே மீளாத மும்பை.. கெத்தாக வெற்றிபெற்ற ஹர்திக் படை..!


அவ்வளவு வேகத்தை நான் பார்த்ததில்லை


விக்கெட்டுகளுக்குப் பின்னால் தோனியின் வேகம் குறித்து, பேசிய தாஹிர், "கடின உழைப்பு. அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். ஸ்டம்பிங்கில் மட்டுமின்றி ரன் ஒடுவதிலும் அவர் அதிவேகமானவர். திரைக்குப் பின்னால் அவர் செய்யும் கடின உழைப்புதான் காரணம். இவ்வளவு வேகத்தில் எந்த விக்கெட் கீப்பரும் ஸ்டம்பிங் செய்வதை நான் பார்த்ததில்லை. அவரைப் பற்றி பேசினால், எங்களுக்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரம் தேவைப்படும். அவரைப் பற்றி பேச நிறைய விஷயங்கள் உள்ளன. அவர் கூலாகவும் அதே சமயம் நல்ல முடிவெடுப்பவராகவும் இருக்கிறார்," என்றார். 



ரஹானே ஃபார்ம் குறித்து


மேலும் தோனியின் தலைமைத்துவத்தைப் பற்றிப் பேசுகையில், தாஹிர், "அவர் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் என்பதால், ஒரு ஸ்பின்னர் போட்டியில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்ய விரும்புகிறார் என்பது அவருக்குத் தெரியும். எனவே சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என தோனி தனது அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்துள்ளார்.


ஒரு சுழற்பந்து வீச்சாளர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும், நம்பிக்கை வைத்து தனிப்பட்ட முறையில் பலமுறை செய்த விஷயங்களையும் விக்கெட்டுக்கான திட்டங்களையும் அவர் வந்து விவாதிப்பார்", என்றார். CSK இல் அஜிங்க்யா ரஹானேவின் வியத்தகு எழுச்சி குறித்து, தாஹிர் பேசுகையில், "ஷேன் வாட்சன் 10 போட்டிகளில் ரன்களை எடுக்க திணறிய போதும் அவரை தொடர்ந்து அணியில் வைத்திருந்தார் தோனி. பின்னர் வாட்சன்தான் CSK ஐ அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றிபெற செய்தார். அதுதான் தோனி வீரர்களுக்கு அளிக்கும் நம்பிக்கை," என்றார்.