தான் தொடங்கியுள்ள புதிய ஆடை நிறுவனத்தின் விளம்பரத்துக்காக தன் தந்தை ஷாருக்கானை இயக்கியுள்ளார் ஆர்யன் கான்.


கடந்த 2021ஆம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் நாடு முழுவதும் லைம்லைட்டுக்கு வந்தார்.


போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு 20 நாள்களுக்கும் மேலாகச் சிறையில் வைக்கப்பட்டதுடன் தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஆர்யன் கான்.


தற்போது 25 வயதை அடைந்துள்ள ஆர்யன் கான், ஏற்கெனவே நடிப்பு தாண்டி இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்த நிலையில்,  தான் வெப் சீரிஸ் இயக்குவதற்கான கதையைத் தயார் செய்து வருவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். 


ஆனால் அதன் பின் ஆர்யன் கான் வோட்கா தொழிலில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதன்படி ஆர்யன் கான் D Yavol எனும் ப்ரீமியம் பிராண்ட் வோட்காவை அறிமுகப்படுத்தி தனது குடும்ப நண்பர்களுடன் இணைந்து பிஸ்னஸ் மேனாக உருவெடுத்தார். இந்த விஷயம் இணையத்தி பேசுபொருளானது.


இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக தற்போது ஆர்யன் கான் ‘D Yavol X’ எனும் புதிய உயர் ரக ஆடை நிறுவனத்தின் இணை இயக்குநராக களமிறங்கி உள்ளார். 


மேலும், தனது ஆடை நிறுவனத்துக்கான விளம்பரப் படத்தில் தனது தந்தை ஷாருக்கான் உடன் இணைந்து நடித்து அவரை வைத்து முதன்முறையாக இயக்கியும் உள்ளார்.  இந்நிலையில் ஆர்யன் கான், ஷாருக்கான் இருவரும் இந்த விளம்பரத்தை தங்கள் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 






நடிப்பில் தனக்கு ஆர்வம் இல்லை என ஏற்கெனவே ஆர்யன் கான் அறிவித்துள்ள நிலையில், தனது வெப் சீரிஸ் கதையை ஆர்யன் கான் கிட்டத்தட்ட தயாரித்து முடித்துவிட்டதாகவும், ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தக் கதையைத் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


முன்னதாக உலகப்புகழ் பெற்ற டைம் பத்திரிகையின் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்து கவனமீர்த்தார்.


டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், இங்கிலாந்து இளவரசர் ஹாரி அவரது மனைவி மேகன்,  ஆஸ்கர் விருது பெற்ற நடிகை மிச்செல் யோ, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உள்ளிட்ட பலரையும் விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்தது அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.


பதான் படத்தின் மிகப்பெரும் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் தற்போது அட்லியின் ஜவான் படத்திலும், ராஜ்குமார் ஹிரானியின் டங்கி படத்திலும் முழு வீச்சில் கவனம் செலுத்தி வருகிறார்.