பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது எனவும் பேரிடர்களுக்கு காரணம் பொதுமக்களாகிய நாம் தான் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதிஷ்குமார், பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது நீதிபதிகள், “உலக நாடுகள் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுகிறார்கள். நாம் அதை கண்ட கண்ட இடங்களில் வீசி எறிகிறோம். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்துள்ளதாக மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. பேரிடர்களுக்கும் இயற்கை சீற்றங்களுக்கும் நாம் வீசி எறியக்கூடிய பிளாஸ்டிக் பைகள்தான் காரணம்.
எனவே பேரிடர்களுக்கு இயற்கையை மட்டும் குறை சொல்ல முடியாது. அதற்கு பொதுமக்களாகிய நாமும் தான் காரணம். உரிமைகளைப் பற்றி பேசும் மக்கள், தங்கள் கடமைகளை பற்றி கவலைப்படுவதில்லை” என வேதனை தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.