ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை காரணமாக பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிவாரண உதவிகள்
மத்திய சென்னையில் டி.பி. சத்திரம், அமைந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சுமார் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைமை அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.
அவர்களுக்கு அரிசி, புது துணிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல், குழந்தைகளுடன் கலந்துரையாடி குழந்தைகளுக்கு சாக்லேட் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் உதவி செய்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில், திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது .உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிரைக் காக்கும் பேரிடர் மீட்புப் படையினரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி என்பது அளப்பரியதாகும். இருப்பினும் புயல், மழை, வெள்ளப் பெருக்கு ஆகிய காலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அதிக அளவில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அங்கு மலையடிவாரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களையும், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.