லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ 15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் வெளியான ‘மருது’ படத்திற்காக கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ 21 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தார். ஆனால் அந்த தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியாத நிலையில், லைகா நிறுவனத்திடம் அந்த தொகையை செலுத்துமாறு விஷால் கூறியிருக்கிறார்.
கோரிக்கை வைத்த விஷால்
விஷாலின் கோரிக்கையை ஏற்ற லைகா நிறுவனம் அந்தத் தொகையை செலுத்தியது. இதனையடுத்து லைகா நிறுவனம் போட்ட ஒப்பந்தத்தில், விஷால் இந்தத்தொகையை கடந்த டிசம்பர் மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. ஆனால் விஷால் தொகையை செலுத்த முன்வரவில்லை எனத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் விஷால் தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
திருப்பி செலுத்த உத்தரவு
இந்த வழக்கு இன்று ( மார்ச் 12) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், லைகா தரப்பு தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல், “வீரமே வாகை சூடும்” படத்தை ஓடிடியில் வெளியிடக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கூறியது.
இதைத்தொடர்ந்து லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ 15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்மன்றம் கூறியுள்ளது. மேலும் பணத்தை செலுத்தியதற்காக ரசீதை 3 வாரங்களுக்குள் நடிகர் விஷால் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.