சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ப்ரியா ராஜன் பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்றும், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு பொய்யான தகவலை கொடுத்துள்ளார் என்றும் கூறிய பாஜகவின் கராத்தே தியாகராஜன், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு போட்டு,அவர் பதவியை பறிக்கப் போவதாகவும் கூறினார்.


தமிழக பாஜகவின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான, சென்னை மண்டல பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தலித் மக்களுக்கு அரசு வழங்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள், அவர்கள் மதம் மாறினால் கிடைக்காது என்ற நிலை இருக்கிறது. இதனால், மதம் மாறியவர்கள் தொடர்ந்து, இந்து மதத்தில் நீடிப்பது போல காட்டிக் கொள்கின்றனர்.


சென்னை மேயராக இருக்கும் ப்ரியா ராஜனின் மாமா செங்கை சிவம், திமுகவில் நீண்டகாலம் பல்வேறு பொறுப்புகளை வகித்ததோடு மட்டுமல்லாமல், சென்னை பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


பெரம்பூர் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாக இருந்தபோது,செங்கை சிவம் கிறிஸ்துவர் ஆவார். அவர் தன் அன்றாட வாழ்வில் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றி,  ஞாயிறு தோறும் தேவாலயத்துக்கு சென்று வருபவர் என்ற தகவல் தெரியவந்தது. இதனால், அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  தான் கிறிஸ்துவர் இல்லை என்றும், இந்து மதத்தை சேர்ந்தவன் என்றும், கூறி ஆரிய சமாஜத்தில் 
இருந்து கடிதம் வாங்கி, நீதிமன்றத்தில் ஆவணத்தை கொடுத்து தப்பித்துள்ளார்.


அந்த மாதிரி ஒரு பிரச்னையை தற்போது ப்ரியா ராஜனும் சந்தித்துள்ளார். ப்ரியா ராஜன், இவான்ஜலிக்கல் தேவாலயத்தின் உறுப்பினர் உள்ளார். கிறிஸ்துவத்தை பின்பற்றும் அவர் தன்னை தாழ்த்தப்பட்ட இந்து பெண்ணாக காட்டி சட்டத்தை ஏமாற்றி மேயராகி உள்ளார்.




மேயர் வேட்பாளராக வரக்கூடிய பெண் தேர்தல் ஆணைத்தில் தாக்கல் செய்த மனுவில் இருந்தே கட்சி தலைமை உஷாராக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், யார் என்ன கேட்க முடியும் என்ற அசாத்திய நம்பிக்கையில் திமுகவினர் தொடர்ந்து தவறு செய்து வருகின்றனர்.


இதேபோல்தான், சென்னை மேயராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் வேட்பு மனு தாக்கலிலும் தவறு செய்ததால், மேயர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.


அப்போது, ஒருவர் ஒரு முறை மேயராக இருந்து விட்டால், மீண்டும் அந்தப் பதவிக்கு வர முடியாது என சட்டம் இருந்தது. ஸ்டாலின் ராஜினாமாவுக்கு பிறகு, அதில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.


கட்சி தலைவரில் இருந்து தொடங்கி, தற்போதைய ப்ரியா வரை திமுகவில் யாரும் சட்ட நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. சட்டத்தை மீறி செயல்படும் யாரையும் பாஜக விடாது என்பதால் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து கொண்டு செல்லப்போகிறோம்” என்று கூறினார்.


கராத்தே தியாகராஜனின் புகார் குறித்து பதில் அளித்த ப்ரியா ராஜன், செங்கை சிவம் தன் மாமாதான் என்றும், எம்.எல்.ஏவாக இருந்த அவரையும், இதே சிக்கலை சந்தித்து வெற்றி பெற்றார் எனவும், அதே பிரச்னையை, தலித் பெண்ணான தனக்கும் ஏற்படுத்துவதாகவும் கூறினார். மேலும், இதை தைரியமாக எதிர்கொள்ளப்போவதாகவும்,  தலைமைக்கு தகவல் கூறிவிட்டால், இந்தப் பிரச்னை குறித்து கவலைப்படமாட்டேன் என்றும் கூறினார்.