மதுரை மேலூரை சேர்ந்தவர் கள்ளர் பண்பாட்டு மையத்தின் தலைவர் கலைமணியம்பலம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில்," இயக்குநர் சந்திரா பாய் தயாரிப்பில் கரு பழனியப்பன் நடிக்கும் திரைப்படத்திற்குப் கள்ளன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளர் சமூகத்தினர். தமிழகம் முழுவதும் சுமார் 40 லட்சம் மக்கள் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். தமிழக அரசின் ஆவணங்களில் கள்ளன் என்றிருந்த பெயர் பின்னர் கள்ளர் என திருத்தி அமைக்கப்பட்டது. அந்தப் பெயரிலேயே தமிழக அரசு சாதி சான்றிதழையும் வழங்கி வருகிறது.

 



 

கள்ளன் எனும் பெயரில் எடுக்கப்படும் திரைப்படம், கொள்ளை கூட்ட செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இது கள்ளர் சமூகத்தின் பெயரை களங்கப்படுத்தும் வகையிலும், அந்தச் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு மன உளைச்சலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது போல காண்பிக்கப்படுகிறது. இதுபோல குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்துவது சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, கள்ளன் பெயரில் திரைப்படத்தை வெளியிட தடை விதித்தும் அதன் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

 



 

அரசு ஆதிதிராவிடர் விடுதியில் வார்டன்கள்  3 பேர் மீதான குறிப்பாணை ரத்து செய்ய கோரிய வழக்கு -  பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை தடுக்கும் பிரிவின் கீழ் அமைக்கப்படும் சிறப்பு குழுவானது 4 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 

நெல்லை மாவட்டம் குலவணிகர்குளம் அரசு ஆதி திராவிட விடுதியின் வார்டன்களாக உள்ள, சரவணன், நடனசிகாமணி, இகநாசி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர்கள் மூவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

 

பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை தடுக்கும் பிரிவின் கீழ் அமைக்கப்படும் சிறப்பு குழுவானது இந்த வழக்கை விசாரித்து நான்கு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர்கள் வழக்கு விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அதுவும் அளிக்கப்படும் அறிக்கையில் குறிப்பிடப் பட வேண்டும். இந்த விசாரணையோடு, மனுதாரர்கள் மீது துறை ரீதியான விசாரணையும் முன்னெடுக்கப்பட வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்