கனமழை காரணமாக,சென்னையில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுமக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளுக்கு இதுகுறித்து பள்ளிக்கல்வி அளித்த உத்தரவில், " பள்ளி வளாகத்துக்குள் மழைதண்ணீர் தேங்காமல் இருப்பதையும், சுற்றுச்சுவர்கள், கட்டடங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் மின் இணைப்பு சரியாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
வரும் 9ம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.இது, வட மேற்கு திசையில் நகர்ந்து நாளைக்குள் வடதமிழகத்தில் நோக்கி நகரக்கூடும். அதே நேரத்தில், கிழக்கு மத்திய அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இந்த இரண்டின் தாக்கம் காரணமாக, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் இந்த வாரம் தொட்டே பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும், நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, 2015 கனமழைக்குப் பிறகு, நுங்கம்பாக்கத்தில் அதிகப்படியான மழை அளவு பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி மட்டும் மயிலாப்பூரில் 226 மி.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 207 மி.மீட்டரும், அம்பத்தூரில் 205 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல தேங்கியுள்ளது. பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மிக கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையின் முக்கிய பகுதிகளான வடபழனி, நுங்கம்பாக்கம்,மாம்பலம், மயிலாப்பூர், தி நகர், போரூர், அண்ணாசாலை, கோடம்பாக்கம், கோயம்பேடு, குரோம்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் தண்ணீரில் மிதக்கிறது. வீட்டுக்குள் மழைதண்ணீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் சொல்லன்னா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
முன்னதாக, சென்னையில் பெய்த கனமழை காரணமாக, தண்ணீர் தேங்கியுள்ள எழும்பூர், பெரம்பூர், ஓட்டேரி, பாடி, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மின்சார விநியோகம், மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் மேலாண்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அங்கிருந்த பொது மக்களுக்கு ஆறுதல் அளித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
1913, 04425619206, 044 - 25619207, 044 - 25619208 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
மேலும் 9445477205 என்ற வாட்ஸ் அப் மூலமும் புகாரை தெரிவிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை அறிவித்துள்ளது திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்
1077
044 27664177
044 27666746
திருவள்ளூர் மாவட்ட உதவி மையம் எண்கள்
18005997626
வாட்ஸாப் எண்
98403 27626, 94443 17862 எண்ணிற்கு வாட்ஸாப் மூலமாக புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்