சென்னையில் திடீரென பலத்த மழை பெய்து வருகிறது. நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரவாயல், ஈக்காட்டுதாங்கல், வானகரம், திருவேற்காடு, அம்பத்தூர், அனகாபுத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. 


சென்னையில் திடீர் கனமழை: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில், கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையில் சில தினங்களாக வெயிலானது வாட்டிய நிலையில் , நேற்று முதல் மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. 



தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக வடகிழக்கு பருவமழையே அதிகளவு மழைப்பொழிவைத் தரும். தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்யும். ஆனால், இந்த முறை தென் மேற்கு பருவமழை இயல்பை விட 88 சதவீதம் தமிழ்நாட்டில் பெய்துள்ளது.


வடகிழக்கு பருவமழையும் அதிகளவு பெய்யும் என்று கருதப்படுகிறது. இதனால், தற்போது முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், முக்கிய நீர்நிலைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதேசமயம் மழைநீரை வீணாகாமல் சேர்த்து வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு வங்கக்கடல்,  வடக்கு  ஆந்திர கடலோரப் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல்  மற்றும் அதனை  ஒட்டிய  வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்: 


30.08.2024 மற்றும் 31.08.2024: வடக்கு மற்றும் அதனை  ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு  அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா- கர்நாடகா கடலோரப்பகுதிகள்  மற்றும்  லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.