சென்னை கொளத்தூரில் பாலம் கட்டுவதற்கு தேவையான இடத்தை முன்னறிவிப்பின்றி வீடுகளை இடித்து தள்ளுவதை கண்டித்து அவ்வை நகர் குடியிருப்பு பகுதிகள் 5ஆவது நாளாக கை குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில்  அவ்வை நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 50க்கும் அதிகமான வீடுகளில் நூற்றுக்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த அவ்வை நகர் பகுதி வழியாக கொளத்தூரையும் - வில்லிவாக்கத்தையும் இணைக்கும் பாலம் கட்டுவதற்கு, இடம் கேட்டு அளவீட்டு பணிகளை முடித்து, 7 நாட்களுக்கு மட்டுமே கால அவகாசம் கொடுத்துவிட்டு திடீரென வீட்டை இடித்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 



 

வீடுகளை மேலும் இடித்து விடக்கூடாது என கூறியும், வீடுகளை இடித்ததை கண்டித்தும் அப்பகுதி மக்கள் கடந்த 5 தினங்களாக கைக் குழந்தைகளுடன் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சரின் தொகுதியாக இருக்கக்கூடிய இந்த கொளத்தூரில் நடைபெறும் தங்களது போராட்டத்தில், உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அந்த பகுதிகளில் 300 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு மீதமிருந்த வீடுகளை இடிக்கும் பணியிலும் அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் உள்ளீட்டவர்களை வலுகட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தி அருகில் இருக்கக்கூடிய சமூக நலக்கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

 

இதனால் அந்த பகுதிக்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. அடைக்கப்பட்ட பகுதிகளில் லாரி போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளே நடப்பது வெளியே தெரியாத வகையில் மறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து அங்குசெய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை உள்ளே விடாமல் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர். மேலும் மக்களின் கருத்தை வெளியிட கூடாது எனவும் மிரட்டியதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். காவல் துறையினர் தாக்கியதில் ஆரோக்கிய ராஜ் என்பவர் மயக்கமுற்றுள்ளார். அவருக்கு பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




 

நடத்துநர் மீது மாணவர்கள் கற்களை வீசித் தாக்குதல் - பேருந்தை பாதியிலேயே நிறுத்தி போராட்டம் 

 

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூருக்கு மாநகரப் பேருந்து 29A தடம் எண் கொண்ட பேருந்து வந்து கொண்டிருந்தது. புரசைவாக்கம் மற்றும் டவுட்டன் பகுதியில் ஏறிய ஏராளமான பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கிய படியும் , கூரை மீது ஏறியும் , சாலையில் கால்களை தேய்த்த படி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதை கண்டக்டர் தட்டி கேட்டதால் மாணவர்கள் தொடர்ந்து பயணிகள் மற்றும் கண்டக்டரை கிண்டல் செய்தவாறு  பயணத்தை தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் மாணவர்களின் அத்துமீறல்களை கண்டக்டர் எச்சரித்தார்.

 



 

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கீழே இருந்த கற்களை எடுத்து கண்டக்டரை நோக்கி அடித்து விட்டு தப்பித்து ஓடினர். இதில் கண்டக்டர் மற்றும் பெண் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதை கண்ட மற்ற பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மாணவர்களை கண்டிக்கும் வகையில் ஆங்காங்கே பேருந்தை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 




இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்து ஓட்டுநர் கண்டக்டர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைக்க முயன்றனர். பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை வைத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததால் ஓட்டேரி பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.