வெறுப்பை தூண்டும் விதமான பேச்சுக்களும் அவதூறு பேச்சுக்களும் சமூகத்தை பேரழிவுக்கு இட்டுச் செல்லும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, சிறுபான்மை சமூகம், தலித் மக்களுக்கு எதிராக பேசப்படும் வெறுப்பு பேச்சும் அவதூறு பேச்சும், சமூகத்தின் அமைதியை கெடுத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 


திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய R.B.V.S. மணியன்:


வெறுப்பு பேச்சையும் அவதூறு பேச்சையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பை தூண்டும் விதமான அவதூறு பேச்சை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


இருப்பினும், வெறுப்பை தூண்டும் விதமாக அவதூறு பேசுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், திருவள்ளுவரை பற்றியும் அம்பேத்கரை பற்றியும் இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவரும் இந்துத்துவா சொற்பொழிவாளருமான ஆர்.பி.வி.எஸ் மணியனை சென்னை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி அதிரடியாக கைது செய்தனர்.


நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை நீதிமன்றம்:




தலித் மக்கள், அம்பேத்கர், திருவள்ளூவர் ஆகியோரை பற்றி அவர் தெரிவித்த மோசமான கருத்து சமூக வலைதளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் சட்டத்தை உருவாக்கியவர் ராஜேந்திர பிரசாத் என்றும் அவருக்காக கிளார்க் வேலை பார்த்தவர் அம்பேத்கர் என்றும் அவர் கூறியிருந்தார். திருவள்ளுவர் என்ற ஆளே கிடையாது, அவர் ஒரு கற்பனை என்றும் ஆர்.பி.வி.எஸ். மணியன் கூறியிருந்தார். இப்பேச்சுக்காக ஆர்.பி.வி.எஸ். மணியனை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டது. 



இதனையடுத்து அம்பேத்கரை இழிவாகப் பேசியதற்காக சென்னை மாம்பலத்தில் உள்ள அவரது வீட்டில் ஆர்.பி.வி.எஸ். மணியனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, தான் பேசிய கருத்துக்கு அவர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், தனது உடல்நிலையையும் வயதையும் கருத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டும் என பிணை மனு தாக்கல் செய்தார்.


இந்த நிலையில்,  ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினமும் காலை ஆஜராக வேண்டுமென சென்னை முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.


இதையும் படிக்க: Whatsapp Feature: இனி போன் நம்பர் தேவையில்லை.. யூசர் நேம் போதும்.. வாட்ஸ் அப்பில் வரப்போகும் புதிய அப்டேட்!