Kalaignar Magalir Urimai Scheme: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கும் நோக்கில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உரிமைத் தொகை கிடைக்காத மற்ற பெண்களும், வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement


ரூ. 1000 பெறாத பெண்கள் அப்ளை பண்ணுங்க!


கடந்த 2021ஆம் ஆண்டு, திமுக அறிவித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று மகளிர் உரிமைத் தொகை. ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 2023ஆம் ஆண்டு இந்த திட்டத்தை அமல்படுத்தியது.


கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரையிலான தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் 1.14 கோடி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் பலர் விடுப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


விடுபட்டவர்களுக்கு சர்ப்ரைஸ்:


இந்த நிலையில், உரிமைத் தொகை கிடைக்காத மற்ற பெண்களும், வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தில் 10 ஆயிரம் சிறப்பு முகாம்களை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்க சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.


மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, தகுதி உடைய குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.


யார் எல்லாம் விண்ணப்பிக்கக் கூடாது?


ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர், இந்த திட்டத்தில் சேர முடியாது. அதேபோல, குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது. சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்களும், இந்த திட்டத்தில் பயன் பெற தகுதியற்றவர்கள். 


திட்டத்தை செயல்படுத்தும் துறைகள்:


தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் இத்திட்டத்தை கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் மாநிலக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.


இக்குழுவில், வளர்ச்சி ஆணையர், நிதித்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். திட்டச் செயல்பாடுகள் குறித்து அவ்வப்பொழுது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, செயல்படுத்தும் அரசுத் துறை அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் இக்குழு உரிய அறிவுரைகளை வழங்கும்.