சென்னையில் மரம் திடீரென விழுந்ததில் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த வங்கி பெண் மேலாளர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. க்க்


சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆங்காங்கே சில இடங்களில் மழை நீர் தேங்கினாலும் திடீரென பெய்த மழை தலைநகரையே ஸ்தம்பிக்க செய்தது. இதனிடையே சென்னை மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே கழிவு நீர் கால்வாய் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. 


அந்த வகையில் கே.கே.நகரில் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை - லட்சுமணசாமி சாலை சந்திப்பில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று திடீரென சாலையில் சாய்ந்து விழுந்தது. 


அந்த மரம் நேராக சாலையில் சென்று கொண்டிருந்த கார் மேல் விழுந்தது. இதில் காரில் இருந்த வங்கி மேலாளர் வாணி கபிலன் (55), அவரது சகோதரி எழிலரசி, டிரைவர் கார்த்திக் ஆகியோர் வசமாக மாட்டிக் கொண்டனர். கார் நொறுங்கியதால் 3 பேரையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வாணி கபிலன் சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். எழிலரசி, கார்த்திக் ஆகியோர் கே.கே.நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இதற்கிடையில் மரம் விழுந்ததற்கு கால்வாய் தோண்டும் பணி தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அதுகுறித்து சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. அதில் மரம் விழுந்ததாக கூறப்படும் சம்பவ இடத்தில் கடந்த 2 நாட்களாக மழைநீர் வடிகால் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், 2 நாட்களுக்கு முன்பாக மரம் இருக்கும் காரணத்திற்காக 10 அடிக்கு முன்னதாகவே பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


மேலும் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்த காரணத்தாலும், மண்ணின் ஈரத்தன்மை காரணமாகவும் மரம் விழுந்துள்ளது தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவாக விசாரணையை மேற்கொள்ள உத்தவிரப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. மரம் விழுந்து பெண் பலியான சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண