வேலூர் அருகே, சென்னை - பெங்களூரூ வழித்தடத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால், சென்னை - கோவை இண்டர்சிட்டி ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நடு வழியில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு கோவை இன்டர்சிட்டி பயணிகள் விரைவு ரயில் நாள்தோறும் தென்னக இரயில்வேயால் இயக்கப்படுகிறது. அதன் படி இன்று சென்னையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு ப்ளாட் பார்ம் எண் 10ல் இருந்து புறப்பட்டது.


இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு என அதன் அன்றாட வழித்தடத்தின் வழியாக கோவை செல்லவிருந்தது. இந்நிலையில், சுமார் மாலை 4.20 மணி போல் காட்பாடி ரயில் நிலயாத்திற்கு முன்னதாக உள்ள சேவூர் ரயில் நிலையத்தினை கடந்து செல்லுகையில் மின் கம்பி அறுந்து விழுந்ததால், இரயிலை தொடர்ந்து இயக்குவதில் தடை ஏற்பட்டது.


இதனால் இரயிலில் பயணம் செய்து வந்த பயணிகள் நடு வழியில் அவதிப்பட்டு வருகின்றனர். மின் கம்பி அறுந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்தவிதாமன சேதாரமும் ஏற்படவில்லை. மின் கம்பி அறுந்து விழுந்ததால், அதனை கூடிய விரைவில் சரி செய்ய இரயில்வே துறையினர் விரைந்து பணிகளை செய்து வருகின்றனர். மேலும், கோவை இன்டர்சிட்டி ரயிலை தொடர்ந்து இந்த வழித்தடத்தில் செல்லவுள்ள அனைத்து ரயில்களும் தாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.