தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. நாளை தொடங்கி வரும் 31ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இதில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வை எழுத உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாத பொதுத் தேர்வு இம்முறை நடைபெறுகிறது. 


இந்நிலையில் இந்தாண்டு பொதுத்தேர்வை எழுதும் மாணவி ஒருவர் கடுமையான போராட்டத்திற்கு தேர்வு எழுத உள்ளார். தன்னுடைய நிலை குறித்து அவர் ஆங்கில தளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதன்படி சிந்து என்ற மாணவி சென்னை திநகரில் உள்ள வித்யோதயா பெண்கள் பள்ளியில் பயின்று வருகிறார். இவருடைய தந்தை சக்தி ஒரு டீ கடை நடத்தி வருகிறார். சிந்து ஒரு சிறப்பான கைபந்து வீராங்கனையாக இருந்து வந்துள்ளார். 


இந்தச் சூழலில் கடந்த 2020ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக அவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். அந்த விபத்து அவருடைய வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அவருடைய பற்கள் அனைத்தும் விழுந்துள்ளது. அத்துடன் அவருக்கு கால், முகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக சுமார் 10 அறுவை சிகிச்சைகள் வரை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. 


இந்த விபத்திற்கு பிறகு அவர் முழுவதும் கட்டிலில் படுத்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் இவர் உதவியாளர் ஒருவரின் உதவியுடன் தேர்வை எழுத உள்ளார். இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய விபத்திற்கு பிறகு சிந்து, “எனக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் இனிமேல் அதற்கு சாத்தியமில்லை. எனவே நான் மறுபடியும் நடக்க தொடங்கினால் கைப்பந்து விளையாட்டை விளையாட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 


சிந்து குறித்து அவருடைய தந்தை சக்தி, “என்னுடைய மகள் அதிகமான நம்பிக்கை மற்றும் தைரியம் கொண்டவள். மருத்துவர்கள் அனைவரும் அவர் பிழைப்பது கடினம் என்று சொன்னார்கள். அப்போது என் மகள் என்னிடம் கூறியது ஒன்று தான். நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் விரைவில் குணம் அடைந்துவிடுவேன் என்று கூறினார். அதேபோல் வேகமாக உடல் நலம் தேறி வந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். 


சிந்துவின் விபத்திற்கு பிறகு அவருடைய பள்ளி ஆசிரியர்கள் வாரத்திற்கு இருமுறை வீட்டிற்கு வந்து அவருடைய சந்தேகங்களை தீர்த்து வைக்கின்றனர். மேலும் சிந்துவின் சிகிச்சைக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆசிரியர்கள் கொடுத்து உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும் சிந்து மனம் தளராமல் தேர்வு எழுத உள்ள பெரிய முன்னுதாரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண