சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படை சாகசத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தயார் நிலையில் இருந்தோம்:


இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை என ஏராளமான மருத்துவமனைகளில் 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் கேட்டது 100 படுக்கைகள். 65 மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர்.


விமானப்படை சாகசம்:


15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 15 லட்சம் பேர் பங்கேற்றார்கள். வெயில் தாக்கம் என்பது பகல் 11 மணி வரை மதியம் 1 மணி வரை நடைபெற்றது. வெயிலின் தாக்கம் கொடூரமாக இருந்தது.  விமான சாகசத்தை காண வரும் பொதுமக்கள் குடைகளுடன் வர வேண்டும். தண்ணீருடன் வர வேண்டும். கண்ணாடி அணிந்து வர வேண்டும். தொப்பி அணிந்து வர வேண்டும் என்று கூறியிருந்தனர். நீங்கள் அனைவரும் வாருங்கள். வெயில் இருக்காது. காய்ந்து போன வானமாக இருக்காது என்று யாரையும் கூப்பிடவில்லை. அவர்கள் கூப்பிடும்போது இதை அனைத்தையும் இந்திய விமானப்படை தெளிவாக கூறினார்கள்.


வருத்தத்திற்கு இறப்பு:


 இந்த சாகச நிகழ்வானது உலகத்திற்கு இந்தியாவின் விமான கட்டமைப்பை தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும். தஞ்சையில் இருந்து ஒரு விமானம் ரஃபேல் என்று நினைக்கிறேன் 20 நிமிடத்தில் வந்தது. இத்தகைய ஆற்றல் உள்ள விமான சேவை இந்தியாவில் இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டும் நிகழ்ச்சி இது. உண்மையில் இந்த இறப்பு வருத்தத்திற்குரிய ஒன்றுதான். யாரும் எதிர்பார்த்து நடக்கவில்லை.


அனைவரும் வருந்துகிறோம். அனைவரும் அனுதாபம் தெரிவிக்கிறோம். இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் தோற்றுவிடுவார்கள். 5 பேருடைய இறப்பு வருத்தத்திற்குரியது. இது வெயில் தாக்க மரணம். இவர்கள் 5 பேரும் மருத்துவமனைக்கு இறந்த நிலையிலே கொண்டு வரப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பலனின்றி யாரும் இறக்கவில்லை.

மருத்துவமனையில் உள்ளவர்கள் உடல்நிலை:


ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்டவர்கள் 43 பேர். அவர்களில் புறநோயாளிகள் 40 பேர். ஒருவர் உயிரிழந்துவிட்டார். இரண்டு பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். ஓமந்தூரரார் மருத்துவமனையில் 49 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 46 பேர் புறநோயாளிகள். ஒருவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். புறநோயாளிகள் நேற்று இரவே வீடு திரும்பிவிட்டனர். அதில் இருந்தவர்களில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர்.


ராயப்பேட்டை மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்கள் 2 பேர். புறநோயாளிகள் 7 பேர். உள்நோயாளியாக ஒருவர் உள்ளார். 2 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர் கூட அனுமதிக்கப்படவில்லை. வெயில் தாக்கத்திற்கு ஆளாகியவர் எண்ணிக்கை 103. மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்கள் 7 பேர். 7 பேரும் நல்ல நிலையிலே உள்ளனர்.


அரசாங்கம் இறப்பே இல்லை என்று செய்தியை பரப்ப வேண்டாம். 15 லட்சம் பேரும் குறிப்பிட்ட சதுர அடியின் கீழ் வந்துவிட முடியாது. எங்கெல்லாம் வான் எல்லை தெரியுமோ அங்கிருந்து பார்த்துள்ளனர்."


இவ்வாறு அவர் பேசினார்.