சென்னையில் மாடு முட்டியதில் சிறுமிக்கு காயம் ஏற்பட்ட புகாரில் மாட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அருகம்பாக்கத்தை சேர்ந்த அஸ்வின் பானு தனது மகள் மற்றும் மகனை பள்ளி முடிந்து அழைத்து சென்று கொண்டிருந்தார். எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் தாயுடன் சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மாடுகள் சில சென்றுள்ளன. அதில் ஒரு மாடு திடீரென ஆக்ரோஷப்பட்டு சிறுமியை கொம்பால் முட்டி தூக்கி கீழே எறிந்தது.
கீழே விழுந்த சிறுமி எழ முடியாமல் அழுது கொண்டிருக்க, விடாமல் அவரை மாடு முட்டி கொண்டிருந்தது. இரு மாடுகள் சிறுமியை முட்டி கொண்டிருந்தபோது, அங்கிருந்த சிலர் கல் எடுத்து வீசி மாடுகளை விரட்ட முயற்சித்தனர். ஆனாலும், அதற்கெல்லாம் அஞ்சாத மாடுகள் சிறுமியை தொடர்ந்து தாக்கி கொண்டிருந்தன. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய அப்பகுதி மக்கள் மாடுகளை விரட்டி அவரை காப்பாற்றினர். எழுந்திருக்கவே முடியாமல் அழுது கொண்டிருந்த சிறுமி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் தையல் போடப்பட்டுள்ளது. சிறுமியை மாடுகள் முட்டி தாக்கிய சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலானதும், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கிடையே சிறுமிக்கு நேர்ந்தது குறித்து அரும்பாக்கம் காவல்நிலையத்தில், அவரது தாய் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் மாட்டை அலட்சியமாக தெருவில் விட்டதாக அதன் உரிமையாளர் விவேக் மீது, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், கவனக்குறைவாக இருப்பது என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் விவேக்கை கைது செய்தனர். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சென்னை மாநகராட்சி மேயர் ராதாகிருஷ்ணன், ”சென்னை மாநகராட்சி பகுதியில் பொதுவெளியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மாடுகளை அலட்சியமாக திரிய விட்டால் அதன் உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். மாடுகள் சுற்றித்திரிவதை கண்காணிக்க கால்நடை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சிறுமியை தாக்கிய மாட்டிற்கு வெறிநோய் இருப்பதா என்பதை கால்நடை மருத்துவர்கள் பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் படிக்க:Jailer Review: ‘தியேட்டரில் தலைவரு அலப்பறை’ .. ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி? .. முதல் விமர்சனம் இதோ..!