முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
இலங்கையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்ல இருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்தார். இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சாந்தன் உட்பட 7 பேர் 2022ல் விடுதலை செய்யப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்தார்.
உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற கடந்த ஜனவரி 27ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில்ம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 7.50க்கு உயிர் பிரிந்ததாக ராஜீவ் காந்தி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயாரை சந்திக்க முடியாமல் போன சோகம்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 32 வருடங்கள் சிறையில் இருந்த ஒருவரான சாந்தன் என்ற சுதேந்திரராஜா, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்தாண்டு விடுவிக்கப்பட்டார். இலங்கை தமிழராக அறியப்பட்ட சாந்தன், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டபின் திருச்சி அகதிகள் முகாமில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே, இலங்கைக்கு சென்று தனது வயதான தாயாரை பார்த்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என சாந்தன் தரப்பில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த சூழலில், இலங்கைக்கு செல்ல சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், இதற்கான பயண ஆவணத்தை வழங்கியது. ஆனால், இந்த பயண ஆவணம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வரைதான் செல்லுபடியாகும் என கூறப்பட்டது. இந்த நிலையில் சாந்தன் இலங்கைக்கு சென்றால் வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன்பாக இந்தியா திரும்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாந்தன் கடந்த சில தினங்களாக, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இப்படியான நிலைமையில்தான் இலங்கை நாட்டுக்குச் செல்ல, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இலங்கை தூதரகத்திடம் உரிய அனுமதி பெற்ற பின் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 7.50 மணிக்கு உடல்நலக்குறைவால் சாந்தன் காலமானார். இறுதிவரை, அவரது தாயாரை கடைசி வரை காண முடியாமலே போனது.