தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளார். 


இதுகுறித்து, அவர் தனது ட்விட்டரில்,  தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 40ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். தமிழக அரசுக்கு பாராட்டுகள்.  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வாராவாரம் நடத்தப்பட வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 33.42 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டது தான் இந்திய அளவில் சாதனையாக உள்ளது. அந்த சாதனையை தமிழ்நாடு அரசு விரைவில் முறியடிக்க வேண்டும். 


கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்தி வரும் நிலையில் அதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்; கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை  குறைக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 


நுகர்வு முறை (அ) பயன்படுத்தும் முறை, மக்கள் தொகை மற்றும் தடுப்பூசி வீணாகும் அளவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. முன்னதாக, தமிழ்நாட்டில் நுகர்வு எண்ணிக்கையும், தடுப்பூசி வீனாகும் அளவும் அதிகமாக இருந்தது. உதாரணமாக, மே 1ம் தேதி நிலவரப்படி, தடுப்பூசி பயன்படுத்துதலில்  தமிழ்நாடு 8.83 தடுப்பூசி டோஸ்கள் வீணானதாக தெரிவிக்கப்பட்டது.         



இதன் அடிப்படையில், தமிழகத்தை விட குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதல் தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 


ஆனால், மே, ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தினசரி எண்ணிக்கை உயரத் தொடங்கியது. மேலும், மே 1 முதல் ஜூலை 13 வரையில் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை விட கூடுதல் தடுப்பூசிகளை நிர்வகித்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது. இருந்தாலும், தொற்று பாதிப்புகளுக்கு நிகரான தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்த முதல்வர் ஸ்டாலின், " கடந்த காலங்களில் போதிய ஒதுக்கீட்டைச் சரிசெய்ய 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.  






 மேலும், ஜூன் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசிக் கொள்கையின் கீழ், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்குகிறது. மீதமுள்ளவை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவை பணம் செலுத்தும் நபர்களுக்கு தடுப்பூசி போடப் பயன்படுகிறது. இருப்பினும், தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்து வருகிறது. 75:25 ஒதுக்கீட்டிற்கு எதிராக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான ஒதுக்கீட்டை 90:10 ஆக மாற்ற வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை வைத்திருந்தார்.