பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய அரசின் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்த அண்ணாமலை, கடந்தாண்டு தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதில் தீவிரம் காட்சி வரும் அண்ணாமலை, ஆளும் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இதனிடையே மத்திய உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் முகாமிட்டு அண்ணாமலைக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு குறித்தும் அவரது வீடு, தங்கும் இடங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் பற்றியும் ஆய்வு செய்துள்ளனர். அதில், மதவாதிகள், பிரிவினைவாதிகள் உள்ளிட்ட தரப்பில் இருந்தும் மற்ற இடங்களில் இருந்தும் அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை மத்திய உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அளித்த தங்களின் அறிக்கையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவருக்கு z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்றும் மத்திய உளவுத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, இரண்டொரு நாளில் அண்ணாமலையின் பாதுகாப்பை Z பிரிவு காமாண்டோக்கள் ஏற்கவுள்ளனர்.
33 கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கும் அவர் வீடு மற்றும் தங்குமிடத்திற்கும் பாதுகாப்பு அளிப்பர். அதோடு, குண்டு துளைக்காத வாகனம் அண்ணாமலைக்கு வழங்கப்படும், அதை சுற்று கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவர். இதுவரை மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பில் இருந்துவரும் அண்ணாமலை, இனி Z பிரிவு பாதுகாப்பில் இருப்பார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இந்த பாதுகாப்பு பிரிவுகள் வருவதால், அண்ணாமலையின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவருக்கு உடனடியாக Z பிரிவு பாதுகாப்பை கொடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து திருநெல்வேலியில் உள்ள அண்ணாமலையிடம் மத்திய பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் சென்று அண்ணாமலையின் ஒப்புதலை வாங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், சுப்பிரமணியன்சுவாமி ஆகியோருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் ஆகிய இருவருக்கான Z பிரிவு பாதுகாப்பு சில மாதங்களுக்கு முன்னர் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பிரமணியன்சுவாமி மட்டும் Z பிரிவு பாதுகாப்பில் உள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் அவர்கள் இறப்பு வரை Z பிளஸ் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.