ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து தி.மு.க. எம்.பி.க்கள் குழு மனு அளித்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜன.13) டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசுத்தலைவருடன் சந்திப்பு:
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து தி.மு.க. அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான உரசல்கள் தொடங்கிவிட்டன. ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவரை ஆளுநராக நியமித்து, தமிழ்நாட்டில் இரட்டை ஆட்சியை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என திமுகவின் கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இந்திய அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார் என்றும், அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்கு முன்னதாக திமுக கடிதம் எழுதியது.
இந்நிலையில், சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ”தமிழ்-நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று இந்த மாநிலத்தை அழைப்பதே மிகவும் பொருத்தமானது” என்று பேசியிருந்தார். அதோடு, திராவிட ஆட்சி குறித்தும் அவர் விமர்சித்துப் பேசியதாக தகவல் வெளியானது. இது தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
சட்டசபை சர்ச்சை:
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் (ஜன.10) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமல் தவிர்த்தது திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதனையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதனால் அவையை விட்டு ஆளுநர் ரவி பாதியிலேயே வெளியேறினார். மேலும் அவையில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாக ஆளுநர் வெளியேறியது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் இன்று பயணம்:
இதனிடையே சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமையில் தி.மு.க. எம்.பிக்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் நேற்று (ஜன.12) சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்து ஆளுநர் குறித்து முறையிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாகவும் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்லவிருக்கிறார். ஆளுநர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்தது தொடர்பாக ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித் ஷாக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், தற்போது இது தொடர்பாக டெல்லி செல்லவிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி செல்லும் ஆளுநர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்திக்க உள்ளார்.
விளக்கம் அளிப்பாரா..?
மேலும் டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவரையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது தமிழ் நாடு விவகாரம் தொடர்பாகவும் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தொடர்பாகவும் அவர் விளக்கமளிக்கவுள்ளதாவும் கூறப்படுகிறது.