பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது வீட்டின் முன்பு சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் 8 பேர் சரண் அடைந்தனர்.
கொலை வெறியுடன் தாக்கிய கும்பல்: மேலும், மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். ஆம்ஸ்ட்ராங் கொலை ஏற்படுத்திய தாக்கம் தமிழ்நாடு அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண் அடைந்தவர்கள், உண்மை குற்றவாளி இல்லை என தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
குறிப்பாக, திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனே, உண்மை குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை என கூறியது பெரும் புயலை கிளப்பியது. இப்படிப்பட்ட சூழலில், சிசிடிவி காட்சியை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.
பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி: இதற்கிடையே, சரண் அடைந்தவர்களில் ஒருவரான ரவுடி திருவேங்கடத்தை போலீசார் என்கவுன்டரில் இன்று காலை சுட்டுக்கொன்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மாதவரத்தில் உள்ள ஏரிக்கரை அருகே உள்ள பகுதியில் கொலையாளிகள் மறைத்து வைத்திருக்கின்றனர்.
அந்த பகுதிக்கு, திருவேங்கடத்தை காவல்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, காவல்துறை அதிகாரிகளை தாக்கிவிட்டு திருவேங்கடம் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து, தற்காப்புக்காக போலீசார் அவரை சுட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், திருவேங்கடத்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. திருவேங்கடத்தை என்கவுண்டரில் கொலை செய்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்றோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.