சென்னை ( Chennai News ) : சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. நாள்தோறும் பல நூற்றுக்கணக்கான ரயில்கள் இந்த ரயில் நிலையத்திலிருந்து செல்கின்றன. அதேபோன்று சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள முக்கிய ரயில் நிலையங்களில், ஒன்றாக தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது.  தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் இந்த ரயில் நிலையத்தை அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.


தாம்பரம் ரயில் நிலையம்


செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் வழித்தடத்தில் முக்கிய பகுதியாக தாம்பரம் உள்ளது. இதேபோன்று தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை ஏராளமான மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் ஏற்கனவே, எஸ்கலேட்டர், லிப்ட், நடைமேடை, ரயில்வே காவல் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.


Tambaram Railway Station : மாறும் தாம்பரம் ரயில் நிலையம்.. ரூ.1000 கோடி ப்ராஜெக்ட் .. உலகத்தரத்தில் மாற்ற திட்டம்..!


சென்னை மூன்றாவது மிகப்பெரிய ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் தற்போது திகழ்ந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் வடமாநிலங்களுக்கு செல்பவர்களும், தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளும் தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.


புதிய ரயில்கள்


திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்பட தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்துதான் புறப்படுகின்றன. இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையமாக உருவெடுத்து வருகிறது. இதேபோன்று இனி ஆந்திரா அல்லது வட மாநிலங்கள் அல்லது தென் மாவட்டங்களுக்கு புதியதாக ரயில்கள் அறிவிக்கப்பட்டால், அறிவிக்கப்படும் ரயில்கள் அனைத்தும் தாம்பரத்திலிருந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.




ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு 


இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தை மறு சீரமைத்து அதன் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக மாறி உள்ளது. மிக முக்கிய ரயில் நிலையமாக வளர்ந்து வரும் தாம்பரம் ரயில் நிலையம் கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், அவை போதிய அளவில் இல்லை என்பதால் அதை மேம்படுத்த வேண்டிய நிலை உள்ளதாக பயணிகள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் தற்பொழுது தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெற்கு ரயில்வே சுமார் 1000 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிநவீன கழிவறைகள், அதிநவீன டிஜிட்டல் பலகைகள், ரயில் நிலையத்தில் கூடுதல் இருக்கைகள், ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனம் நிறுத்தும் இடம்,எஸ்கலேட்டர்கள், குடிநீர் வசதிகள், சீரமைக்கப்பட்ட நடைமுறைகள், சீரமைக்கப்படும் மேல் கூரைகள், அதே போன்று ஜிஎஸ்டி சாலை மற்றும் வேளச்சேரி சாலை ஆகிய இரண்டு வழிகளிலும் பிரம்மாண்ட முகப்புகள் உள்ளிட்டவை மறுசீரமைப்பு பணியில் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பசுமை பூங்கா


தாம்பரம் ரயில் நிலையம் அருகே பசுமை பூங்காவும் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. தற்போது இது தொடர்பான மாதிரி புகைப்படங்கள் எக்ஸ் (X )  தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது, அதிநவீன வசதிகளுடன் கூடிய ஐ.டி பார்க்கை பார்ப்பதை போன்று, மெட்ரோவை போன்று ரயில் நிலையம் தோற்றமளிக்கிறது.




இந்த புகைப்படத்தை தற்பொழுது சமூக வலைதளங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். விரைவில், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது