அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தை எட்டிய நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்கள் முன் உரையாற்றினார்.


அதிமுக பொதுக்குழுவில் பேசிய அவர், “ நீங்கள் விரும்பிய தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு இயக்கத்திற்கு கிளை கழகம் மிகவும் முக்கியம். கழகம் வலிமை பெற வேண்டும். கழகம் சிறப்படைய வேண்டும். கழகத்தை காக்க வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.


சில எட்டப்பர்கள் 


சில எட்டப்பர்கள் கழகத்தில் இருந்து களங்கம் கற்பித்துக்கொண்டிருக்கும் நிலையில், எதிரிகளுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் முறியடிக்க வேண்டும் என்று ஒற்றைத்தலைமை வேண்டும் என்று முடிவெடுத்துள்ளீர்கள். அதன்படி என்னை அதிமுக பொதுச்செயலளாராக நியமித்து இருக்கிறார்கள். 


ஜெயலலிதாவின் ஆசி 


1974 -இல், என்னுடைய குக்கிராமத்தில் கிளைக்கழக செயலாளராக எனது பணியை தொடங்கினேன். அப்போது அது காங்கிரஸின் கோட்டை. காங்கிரஸின் கோட்டையாக இருந்த அந்தப்பகுதியில், பின்னாளில் அதிமுக கொடியை பறக்க விட்டோம். 


அதன் பிறகு கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்த நான், 1989 சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றேன். 2011 -இல் எனக்கு அமைச்சராகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எனது பணியை பார்த்து, ஜெயலலிதா நெடுஞ்சாலைத்துறையுடன், பொதுப்பணித்துறையையும் எனக்கு கொடுத்தார். 


ஓபிஎஸ் விட்டுக்கொடுக்கவில்லை 






ஒற்றைத்தலைமை பிரச்னை துவங்கிய போதே தலைவர்கள் அவரிடம் பேசினார்கள். யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம். அதற்கு அவர் கடைசி வரை இசைவு கொடுக்க வில்லை. இரட்டைத்தலைமையால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். ஒற்றைத்தலைமை என்ற குரல் ஓங்கி ஒலித்த நிலையில், அது இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 


எதெற்கெடுத்தாலும் அவர் சொல்வது விட்டுக்கொடுத்தோம் விட்டுக்கொடுத்தோம் என்பது..  உண்மையில் நாங்கள் தான் விட்டுக்கொடுத்தோம். அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்கிறார். போடிநாயக்கனூரில் ஜெயலலிதா போட்டியிட்ட போது அவர் எதிரணிக்கு ஜீவ் ஏஜண்டாக இருந்தார். நீங்களா அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கீறீர்கள் என்கிறீர்கள்.


திமுகவை சாடிய எடப்பாடி பழனிசாமி 


இன்று அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக திறப்பு விழா நடத்துகிறது. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்சி அதிமுக. திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் மாநிலமாக திகழ்கிறது. திமுக அரசு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.மு.க.ஸ்டாலினின் ஆட்சி குடும்ப ஆட்சி. " என்று பேசினார்.