அரசுப்பள்ளிகளில் படித்து முடித்து, உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், மொத்தம் 3.58 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கெனவே இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டமான தாலிக்குத் தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார். இது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றது.
அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது. அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தொழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தினைச் செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில் இணைய தளம் தொடங்கப்பட்டது. இதில் மாணவிகள் பதிவு செய்து உள் நுழையலாம். முன்னதாக, இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை 25.06.2022 முதல் 30.06.2022க்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணையதளத்தில் பதிவிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்கென இளநிலை பயிலும் மாணவியரிடமிருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசு பள்ளி விவரங்கள் பெறப்பட்டு வந்தன.
மாணவிகள் எந்தெந்த ஆவண நகல்களைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்?
1. ஆதார் நகல்,
2. வங்கி கணக்குப் புத்தக நகல்,
3. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்,
4. பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்.
5.சுய விவரங்கள்,
6.வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு விண்ணப்பித்தனர்.
இதனிடையே மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாணவிகள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யக் கால அவகாசம் ஜூலை 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி விண்ணப்பங்களை மாணவிகள் நேற்று மாலை வரை தாக்கல் செய்தனர்.
அவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், மொத்தம் 3.58 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 3,58,304 மாணவியர் மாதம் ரூ.1,000 பெற விண்ணப்பித்துள்ளதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்