காவிரி நீரை தரமுடியாது என்ற கர்நாடகாவின் கருத்தை ஏற்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 


”உச்சநீதிமன்றத்தில் வாதாடி காவிரி நீரை பெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். காவிரி நீரை தர முடியாது என கர்நாடகா சொல்வதை ஏற்க முடியாது. 15 நாட்களுக்கு தினமும் 5000 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. குடிநீர் தேவை என்ற போர்வையில் விவசாயிகளின் நலனை பறிக்கும் கர்நாடகாவின் எந்த செயலையும் தமிழக அரசு ஏற்காது. காவிரி நீர் தர முடியாது என கர்நாடகா கூறுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்” என துரைமுருகன் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டில் மழையளவு குறைந்து இருப்பினும், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு சிடபிள்யுஆர்சி மற்றும் சிட பிள்யுஎம்ஏ ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரின் அளவை குறைபாடு விகிதாசாரத்தின் படி கணக்கிட்டாலும், அவ்வாறு கணக்கிடப்பட்ட அளவை விடக் குறைவாகவே 15 நாட்களுக்கு ஒரு முறை உத்தரவிட்டு வருகின்றன. அதையும் அளிக்க கர்நாடகா மறுப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இது உச்சநீதி மன்றத்தின் ஆணையை மீறும் செயலாகத்தான் கருத்தில் கொள்ள முடிகிறது. 


நேற்று கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 63.801 டி.எம். சி. ஆகும். இந்நிலையில் சிடபிள்யுஆர்சி கர்நாடக அணைகளில் இருந்து இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு, வினாடிக்கு 5000 கன அடி வீதம் 6.48 டி.எம்.சி நீர் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இது பற்றாக்குறை விகிதாச்சாரப்படி பார்த்தாலும் மிகக் குறைவுதான். இதையும் கர்நாடக அரசு அளிக்க முடியாது என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.


உச்சநீதிமன்ற ஆணை யின்படி ஒரு ஆண்டில் கர்நாடகா குடிநீருக்காக உபயோகிக்கக்கூடிய நீரின் அளவு 6.75 டி.எம்.சி மட்டுமே. குடிநீர் பயன்பாட்டிற்கு பிறகு காவிரி படுகையில் கர்நாடகா திரும்ப அளிக்க வேண்டிய நீர் 27 டி.எம்.சி ஆகும்.


நிலைமை இவ்வாறு இருக்க, குடிநீர் தேவை என்ற போர்வையில் கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசா யிகளை வஞ்சிக்கும் செயலே ஆகும். இவ்வாறு, ஒரு மூத்த கர்நாடக அமைச்சர்' இரு மாநில விவசாயிகளின் நலன்களை கருதாமல் கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்ச நீதிமன்றத்தில் இப்பிரச்னை குறித்து எடுத்துரைத்து, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


காவிரி கட்டுப்பாட்டுக் குழுவின் உத்தரவுக்குப் பிறகு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காவிரி பாசன ஆணையக் கூட்டம் புதன் அல்லது வியாழக்கிழமை நடைபெறலாம். அங்கு எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம். நானும், முதல்வர் சித்தராமையாவும் பேசி, தண்ணீர் திறக்க எந்த காரணமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தோம்.


12 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகம் கோரியிருந்தது. 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. முதலில் குடிநீருக்கு முன்னுரிமை கொடுத்து, அதன் பிறகு விவசாயிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது குறித்து யோசிப்போம். முன்னதாக,பெங்களூருவில் மழை பெய்தபோது நம்பிக்கை இருந்தது, ஆனால் இப்போது மழை பெய்யவில்லை, சிக்கல் ஏற்பட்டுள்ளது'' என்றார்.