மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் 56.5 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அரசு வெளியிட்டுள்ளது. 


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ,மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தகுதியான பயனாளர்களை திட்டத்தில் இணைப்பதற்கான பணிகள் அரசு சார்பில் வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட முகாம் ஜுலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இந்த முகாம்களின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் திட்டத்தில் இணைய 1.54 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.


மாதம்தோறும் உரிமைத் தொகை, குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வங்கி கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  குடும்பத் தலைவிகளுக்கு ரூபே ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளது.  இந்த கார்டு மூலம் உரிமைத் தொகை பணத்தை குடும்பத் தலைவிகள் எடுத்துக் கொள்ள முடியும். ஏடிஎம் கார்டுகளை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 1-ம் தேதி உரிமை தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, இத்திட்டத்தில் தகுதியான பயனாளர்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாக உள்ள நிலையில் இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்றது. 


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிப்பு


கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலினை செய்ததில்  57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில், சம்பந்தப்பட்ட மகளிருக்கு அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் கொடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அந்த விளக்கத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் மீண்டும் மனு செய்து தகுதியுடையவர்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும், தகுதியுடைய ஒரு பயனாளி கூட விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம்?


விண்ணப்பங்கள் என்னென்ன காரணங்களுக்காக மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.  நிராகரிக்கப்பட்டவற்றில் 3 லட்சம் விண்ணப்பித்தவர்கள் அரசுப்பணியில் இருக்கும் மகளிர் என்பது தெரியவந்துள்ளது. 


விண்ணப்பங்களில் பெரும்பாலானவை, வருமான வரி செலுத்துவோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சொந்த கார், ஆண்டுக்கு 3,600 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களைச் சேர்ந்த மகளிர் பல லட்சம் பேர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளதால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த திட்டத்திற்காக பிரத்யேகமான செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 


1. விண்ணப்பிப்பவர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்களா? அல்லது சொந்த வீட்டில் குடியிருக்கிறார்களா? என்ற தகவல் சமர்பிக்க வேண்டும்,


2. சொந்தமாக வாகனம் வைத்திருந்தால் அதற்கான ஆவணத்தை சமர்பிக்க வேண்டும்,


3. ஆதார் எண் சமர்பிக்கபட வேண்டும்,


4. குடும்ப அட்டை எண் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்பிக்க படவேண்டும்,


5. செல்போன் எண் அளிக்க வேண்டும்,


6. வங்கிக் கணக்கு எண் அளிக்க வேண்டும், 


7. புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்,


8. எந்த மாவட்டம் என்பதை பதிவேற்றம் செய்ய வேண்டும்,


9. வயது என்ன என்பதை பதிவேற்றம் செய்ய வேண்டும்,


10. என்ன தொழில் செய்கிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும், 


மகளிருக்கு மாதம்  ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை அளிப்பதற்காக இந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூபாய் 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


மேலும் வாசிக்க..Rs.1000 Monthly Assistance For Women: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவையெவை? முழுவிபரம் இதோ..!