ஜல்லிக்கட்டுப் போட்டியில் சாதி பெயரை குறிப்பிடக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கும் முன் தீண்டாமை உறுதி மொழி ஏற்பது குறித்து பரிசீலனை செய்ய அரசுக்கு நீதிமன்றம் ஆணை இட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மானகிரி செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
”தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்த பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பின் தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி வருகிறது.
இந்நிலையில் மதுரையில் பொங்கல் பண்டிகையையொட்டி உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பு வாய்ந்தவை. 2019ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை சாதி மத ரீதியாக நடத்தக்கூடாது, காளைகள் அவிழ்க்கப்படும் போது உரிமையாளர்களின் பெயர்களோடு சாதிப்பெயரை பயன்படுத்தி அறிவிக்கக்கூடாது என நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சாதிப்பெயரை தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசு அதிகாரிகள் முன்பாகவே சாதிப்பெயர்களோடு காளைகள் அவிழ்க்கப்படுகின்றன. இது உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது. இந்நிலையில் இந்தாண்டு நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் குறித்த அறிவிப்பின் போது உரிமையாளர்களின் பெயரோடு சாதிப்பெயர்களை அறிவிக்கக்கூடாது எனவும், போட்டிகளில் பங்கேற்கும் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி கட்டாயம் எடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையின் உரிமையாளர் பெயர் வாசிக்கப்படும் அப்பொழுது குறிப்பிட்ட சாதியின் பெயர்களை சொல்லி காளை அவிழ்த்து விடப்படுகிறது.
இவ்வாறு செய்யக்கூடாது என 2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனை பின்பற்றுவதில்லை முறையாக பின்பற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டி ஆரம்பிக்கும் முன் தீண்டாமை உறுதிமொழி எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர் நீதிமன்ற தீர்ப்பை முறையாக பின்பற்றுவோம் என உறுதி அளித்தார்.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் சாதி பெயர் சொல்லி காளை அவிழ்க்க கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் மேலும் தீண்டாமை உறுதிமொழி எடுப்பது குறித்து மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.