ஐஎப்எஸ் மோசடி: ரூ.5000 கோடி ஆட்டையை போட்ட லட்சுமி நாராயணன் வெளியிட்ட வீடியோ

இந்த ஆண்டுக்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் முதலீட்டாளர்கள் எனக்கு இமெயில் அனுப்புங்கள் என அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்

Continues below advertisement

ஐஎப்எஸ் மோசடி  ( IFS Scam )

Continues below advertisement

காஞ்சிபுரம் (Kanchipuram News): வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாக கொண்டு 'இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்' (ஐஎப்எஸ்) செயல்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை, காஞ்சிபுரம் தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனம், வெளியிட்ட விளம்பரத்தில், 'எங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் பணம் தரப்படும்' என்று தெவிக்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட இந்த நிறுவனமானது 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதிகளில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பல ஆயிரம் கோடி மோசடி

இந்தநிறுவனத்தின் இயக்குனர்களாக வேத நாராயணன், சத்தியநாராயணன் மோகன்ராம் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மட்டும் சுமார் 5900 கோடி ரூபாய் வரை,  மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 84 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் வந்துள்ளன.

ஐஎஃப்எஸ் நிறுவனம் மீது மோசடி புகார்

இது தொடர்பான வழக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை துவங்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து முதலீட்டாளர்கள் பலர், ஐஎஃப்எஸ் நிறுவனம் மீது மோசடி புகார் கொடுத்து வருகின்றனர். வேலூர், ராணிப்பேட்டை, காட்பாடி, காஞ்சிபுரம் திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான முதலீட்டாளர்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

சர்வ சாதாரணமாக சுற்றித் திரியும் வீடியோ

ஐஎப்எஸ் வழக்கை பொறுத்தவரை, முக்கிய இயக்குனர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை, முக்கிய இயக்குனர்கள் பலரும் வெளிநாடு தப்பிச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், அரபு நாடு ஒன்றில் முக்கிய இயக்குனர் ஒருவர் சர்வ சாதாரணமாக சுற்றித் திரியும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த சமயத்தில் முகவர்கள் மற்றும் நிறுவனர்கள் ஆகியவர்கள் வீட்டில் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடத்தில், சோதனைகள் நடைபெற்றது. விரைவில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்து விடுவார்கள், மோசடி நபர்களின் சொத்துக்களை முடக்கி விடுவார்கள், பணம் திரும்பக் கிடைத்து விடும் என முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கிடந்தனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

 நம்பிக்கை மீது விழுந்த குண்டு

முதலீட்டாளர்கள் எப்படியும் தங்கள் பணம் கிடைத்துவிடும் என நம்பிக்கையில் காத்திருந்தபொழுது, அவர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் லட்சுமி நாராயணன், புத்தாண்டை முன்னிட்டு புதிய வீடியோவை வெளியிட்டு இருக்கும் லட்சுமி நாராயணன்  புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.  இந்த ஆண்டுக்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் முதலீட்டாளர்கள் எனக்கு இமெயில் அனுப்புங்கள் என அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். இந்தநிலையில் துபாய் உள்ளிட்ட நாடுகளில் அவர் பணத்தை முதலீடு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி   உள்ளது.

  குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி

ஓராண்டுக்குள் பிரச்சனை தீர்ந்து விடும் என வீடியோவை வெளியிட்டுள்ள லட்சுமி நாராயணன் முதலீட்டாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே  இது போன்ற வீடியோவை வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆரம்பத்தில் ஐஎஃப்எஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்த பொழுது கூட அவர்களுடைய முதலீட்டாளர்களை வைத்து,  அவர்கள் முறையாக எங்களுக்கு பணத்தை கொடுத்து வருகிறார்கள் என இமெயில் செய்ய   வேண்டும் என்ற ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  அதேபோன்று பல முதலீட்டாளர்கள் காவல்துறையிடம் தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சிலர்  இமெயில் செய்திருந்தனர். அதேபோன்று தற்பொழுதும் ஏதோ ஒரு ஏமாற்று வேலை செய்வதற்காகவே , இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

  வீடியோவை -போலீஸ்

தற்போது whatsapp-களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த வீடியோ எங்கிருந்து வந்தது என்பது குறித்த விசாரணை துவக்கப்பட்டுள்ளது.  அதேபோன்று குறிப்பிடப்பட்டுள்ள ஜிமெயில் ஐடியையும் போலீசார் கண்காணிக்க முடிவெடுத்துள்ளனர். விரைவில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முதலீட்டாளர்கள் கவலை


வெளிநாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருந்து வீடியோ போடும் இவரை போலீசார் கைது செய்து, எப்பொழுது அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு,  சட்டத்தின் மூலம் தண்டனை  கொடுக்கப்பட்டு தங்களுடைய பணம் திரும்ப கிடைக்கும் பொழுது எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Continues below advertisement