Kilambakkam Railway Station : சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் பண்டிகை நாட்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொள்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையை கடந்து செல்வதற்கே சுமார் 3 மணிநேரம் வரை ஆனது. இதற்கு தீர்வு காணும் வகையில், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கம் போக்குவரத்து நிலையம் திறக்கப்பட்டிருந்தாலும் மக்கள் அங்கு சென்று பேருந்துகளை பிடிக்க பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தற்பொழுது பொதுமக்கள் வந்து சேர்வதற்கு, பேருந்து மற்றும் தங்களுடைய சொந்த வாகனத்தில் வருவது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. குறிப்பாக பொதுமக்களின் பிரதான எதிர்பார்ப்பு மின்சார ரயில்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்று செல்லவேண்டும் என்பதுதான்.
இதனால் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. கிளாம்பாக்கத்திற்கு வண்டலூரில் இருந்து புதிய ரயில் வழித்தடத்தை அமைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் வழக்கமாக ரயில்வே திட்டங்களை ரயில்வே துறையை நிதி ஒதுக்கி செய்யும் ஆனால் தற்பொழுது இது தமிழ்நாட்டிற்கான தேவை என்பதால் இந்தத் திட்டத்திற்கு சிஎம்டிஏ தரப்பில் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திட்டத்திற்கான முதற்கட்ட தொகையாக 20 கோடி ரூபாய் ரயில்வே வாரியத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வழங்கி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக இந்த பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் ரயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்துள்ளது.
அடுத்தடுத்து ஆகும் செலவினை கணக்கில்கொண்டு மற்ற தொகைகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து மின்சார ரயில்களும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கூடுதலாக பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றார்ப்போல் 30 சதவீதம் வரை, கூடுதல் மின்சார ரயில்களை, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது மக்கள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வருவதற்கு பேருந்துகள் மூலம் சுமார் ஒன்றரை மணிநேரம் வரை ஆகிறது எனவும் இதனால் பேருந்து புறப்படும் நேரத்தில் இருந்து 2 மணிநேரம் முன்கூட்டியே புறப்பட வேண்டிய நிலை உள்ளது எனவும் மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். மேலும் பேருந்து இயக்கம் தொடர்பான அறிவிப்பு முறையாக தெரிவிக்கப்படாததால் மக்கள் கோயம்பேட்டிற்கும் கிளாம்பாக்கத்திற்கும் அலைந்து குழப்பம் அடைகிறார்கள் என சொல்லப்படுகிறது. பேட்டரி கார்கள் கூடுதல் எண்ணிக்கையில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்து வருகின்றனர்.